
. அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
அந்த வகையில், வரும் 22ஆம் திகதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு பேட்டிகளில் ஈடுபட்டுள்ளதே தவிர ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முன்வரவில்லை.
தண்ணீருக்காக வெற்றுக் குடங்களுடன் அலையும் தாய்மார்களையும், ஆங்காங்கே அமைதி வழியில் மறியலில் ஈடுபடும் போது மக்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர்களும், முதல்வரும் பேட்டியளித்து வருகிறார்கள்.
உணவகங்கள் மூடப்படுவது, பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீரின்றி தவிப்பது, ஐ.ரி. கம்பனிகள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி புரிய உத்தரவிட்டிருப்பது, பல தங்கும் விடுதிகள் மூடப்படுவது என எங்கு பார்த்தாலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
சென்னை மாநகர மக்களும், தமிழகமெங்கும் உள்ள மக்களும் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகி தினமும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அனைத்துத் தரப்பு மக்களும் வரலாறு காணாத கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.
குடிநீர் இல்லாப் பிரச்சினை எதிர்காலத்தின் மீது மக்களுக்கு பீதியையே ஏற்படுத்தியுள்ளதை இந்த அரசு ஏற்க மறுத்து வருவதுடன், குடிநீர் பிரச்சினையே இல்லை என்று பொறுப்பற்ற விவாதத்தில் ஈடுபட்டுவருகிறது. கடமை தவறிய அ.தி.மு.க. அரசு கண்ணையும் மூடிக்கொண்டிருப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய சாபக்கேடாக அமைந்துள்ளது.
ஆகவே, அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தையும், முதல்வர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோரின் நிர்வாக படுதோல்வியையும் கண்டிக்கும் வகையிலும், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையைச் சமாளிக்க உடனடியாக ஆக்கபூர்வமான, போர்க்கால நடவடிக்கைகளில் அ.தி.மு.க. அரசு ஈடுபடவேண்டுமென வலியுறுத்தியும் வரும் 22ஆம் திகதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறவழியில் நடத்தப்படவுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
