
பிரிவுக்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாமில் இருந்து பெருமளவு வாள்கள் மற்றும் கத்திகள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற தேடுதலில் துப்பாக்கி ரவைகள், 49 சீனத் தயாரிப்பு வாள்கள், 5 நாட்டு வாள்கள், ஜேலக்நைற் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தேசிய தௌபீக் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் சகாவான சவுதியில் கைதுசெய்யப்பட்ட மில்ஹான் என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஒல்லிக்குளம் பகுதியில் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
அந்தவகையில், நேற்று இடம்பெற்ற தேடுதலின் போது 300 ஜெலிக்நைட் குச்சிகள், 1000 டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
கொழும்பில் இருந்து மில்ஹான் மற்றும் சஹ்ரானின் சாரதியான கபூர் எனப்படும் மொஹமட் சரீப் ஆதம்லெப்பை ஆகியோரை, கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அங்கு அழைத்துச்சென்ற பொலிஸார், அவர்களின் தகவலுக்கமைய குறித்த வெடிபொருட்களை கண்டெடுத்தனர்.
கடந்த மாதம் ஒல்லிக்குளத்தில் சஹ்ரான் பயன்படுத்திய பிரதான முகாம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த வெடிபொருட்களும் அப்பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.
தேசிய தௌபீக் ஜமாத்தின் ஆயுதப் பிரிவுக்கான தலைவராக மில்ஹான் செயற்பட்டுள்ளதுடன், வவுணதீவு பொலிஸார் இருவரின் கொலையும் இவரின் தலைமையில் நடைபெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தொடர்ந்தும் முகாம் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் சி.ஐ.டி.யினர் தொடர்ந்தும் தேடுதல் நடத்தி வருகின்றதுடன் அப்பகுதியில் ஊடகவியலாளர்கள் சென்று புகைப்படம் எடுக்க சி.ஐ.டி.யினர் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
