
ஆலயத்தில் தமிழரின் உரிமையை நிலைநாட்டும் வகையில் எதிர்வரும் 6ஆம் திகதி மாபெரும் பொங்கல் விழாவை நடத்தபோவதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் கூறியுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் கூறுகையில், “செம்மலை, நீராவியடி பிள்ளையார் கோயில் மிக நீண்டகாலமாக தமிழ் மக்களால் வழிபடப்பட்ட ஆலயமாகும். பின்னர் போர் காரணமாக மக்கள் இடம்பெயா்ந்த நிலையில் அங்கு இராணுவத்தினர் முகாமிட்டு சிறிய புத்தர் சிலையையும் வைத்தனர். பின்னாளில் சிறிது சிறிதாக பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், எங்களுடைய பூா்வீகமான மண்ணில், எங்களுடைய வழிபாட்டுத் தலத்தில் எங்களுடைய உரிமையை நிலைநாட்டுவதற்காக எதிர்வரும் 6ஆம் திகதி பாரிய பொங்கல் விழா ஒன்றை பிள்ளையார் ஆலய நிர்வாகத்தில் உள்ள இளைஞர்களும், பொதுமக்களும் இணைந்து ஒழுங்கமைத்திருக்கின்றார்கள்.
இந்த பொங்கல் விழாவுக்காக சிங்கள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக கிராமமான கோட்டைகேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பாண்டங்கள் எடுத்துவரப்பட்டு பூசை வழிபாடுகளும், பொங்கல் விழாவும் இடம்பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
