
நாடுகளுக்கிடையே வர்த்தக போர் தொடர்ந்து நிலவி வருகின்ற நிலையில், அமெரிக்காவின் தடைக்குள்ளாகியுள்ள ஹூவாய் நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களுடன் வியாபாரத்தை தொடரலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தக சபை ஹூவாய் நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனங்கள் வியாபாரம் செய் தடை விதித்தது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் ஹவாய் நிறுவனத்துடனான வியாபார ஒப்பந்தங்களை முறித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன.
தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் ஹூவாய் நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜி-20 மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி சி ஜின் பிங் சந்தித்து வர்த்தக விவகாரம் பற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இருநாடுகளிடையேயான வர்த்தக விவகாரம் சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இருதரப்பும் இணைந்து பொருட்களை விற்பனை செய்வது பற்றி சாதகமான முடிவை எட்டியுள்ளன.
இந்த ஆண்டு மே மாதத்தில் அமெரிக்க வர்த்தக துறை ஹூவாய் நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனங்கள் வியாபாரம் செய்ய தடை விதித்ததால் கூகுள், குவால்காம், இன்டெல் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் ஹூவாய் நிறுவனத்துடனான வியாபார ஒப்பந்தங்களை இரத்து செய்தன.
கூகுள் நிறுவனம் ஹூவாயுடன் வியாபாரம் செய்துவந்த நிலையில், அந்நிறுவனத்தின் Android இயங்குதளத்தை ஹூவாய் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் ஹூவாய் தனது சாதனங்களில் வழங்குவதற்கென சொந்தமாக Hanmen OS (Arc OS) உருவாக்கி அதற்கான காப்புரிமைகளை பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப் பெரிய தொலைத் தொடர்புப் பொருள் தயாரிப்பு நிறுவனமான சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளை தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் அமெரிக்கா இணைத்தது.
இதனையடுத்து கூகுள் நிறுவனம் ஹூவாய் கைத்தொலைபேசியுடனான வியாபார ஒப்பந்தங்களையும், சேவைகளையும் நிறுத்தப்போவதாக அறிவித்திருந்தது. அத்துடன், கூகுள் பிளே வசதி, பாதுகாப்பு செயலி என அனைத்தையும் திரும்பப்பெறுவதாகவும் அறிவித்தது.
இந்த திடீர் அறிவிப்பால் ஹூவாவி பயனாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது
