
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்- வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுக்கிடையிலான சந்திப்பு இன்று(ஞாயிற்றுக்கிழமை) வடகொரிய – தென்கொரிய எல்லையில் இடம்பெற்றது.
ஜப்பானில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் கலந்துக்கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அங்கிருந்து இன்று தென் கொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இன்று முற்பகல் தென்கொரியா சென்ற அவர், தலைநகர் சியோலில் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் உடனான விசேட சந்திப்பில் ஈடுபட்டார்.
இந்தநிலையில், ஜப்பானில் இருந்து தென் கொரியா புறப்படுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட டிரம்ப், இந்த பயணத்தின் போது வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னை சந்திக்க விருப்பம் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, கிம் ஜொங் உன் இந்த சந்திப்பை இன்று உறுதிப்படுத்திய நிலையிலேயே, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு இடம்பெற்றது.
அந்தவகையில், இரு நாட்டு தலைவர்களும் தென் கொரியா – வடகொரியா இடையே உள்ள இராணுவ நடவடிக்கை இல்லாத மண்டலத்தில் சந்திப்பில் ஈடுபட்டனர்.
இதன் போது, தென்கொரிய எல்லையில் டொனால்ட் ட்ரம்பும் வடகொரிய எல்லையில் கிம் ஜொங் உன்னும் நின்றவாறு கைலாகு செய்துக் கொண்டனர்.
இதனையடுத்து, வடகொரியாவுக்கு வருகைத் தருமாறு கிம், அமெரிக்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட ட்ரம்ப், எல்லையை கடந்த வடகொரிய மண்ணில் இன்று காலடி எடுத்து வைத்தார்.
இதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி என்ற பதவியில் இருக்கும்போதே, எதிரி நாடான வடகொரியாவிற்குள் காலடி எடுத்து வைத்த முதல் அமெரிக்க ஜனாதிபதி என வரலாற்றில் இடம்பிடித்தார்.
வடகொரிய எல்;லையில் சிறுது தூரம் நடந்துச் சென்ற ட்ரம்ப், அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு வடகொரிய தலைவருக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும், வடகொரியாவிற்குள் நுழைந்தமையை தான் பெரும் மரியாதையாகக் கருதுவதாகவும் கூறினார்.
இவ்வாறு இரண்டு தலைவர்களுக்கிடையிலும் சில நிமிடங்கள் பேச்சுவார்த்தை இடம்பெற்றதை அடுத்து, ட்ரம்ப் எல்லை வழியாக தென்கொரியாவிற்கு திரும்பிச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
