பி.டி.எஸ். மேல் பட்டப்படிப்புக்காக நடத்தப்படும் நீட் பரீட்சை முடிவுகள் இன்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளன. இதில் தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அந்தவகையில், 59 ஆயிரத்து 785 பேர் இந்த தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 1.40 இலட்சம் மாணவ, மாணவிகள் நீட் பரீட்சை எழுதியிருந்தனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 9.01% சதவீதத்தால் அதிகரித்துள்ளது. எனினும் இந்திய அளவில் தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் தமிழகத்தின் எந்த மாணவ மாணவியரும் வரவில்லை.
தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ருதி என்ற மாணவி அகில இந்திய அளவில் 57ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 720 புள்ளிகளுக்கு 685 புள்ளிகள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
2019-20 கல்வியாண்டில் நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் பரீட்சை கடந்த மே 5ஆம் திகதி நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் ஃபானி புயல் காரணமாக அங்கு 20ஆம் திகதி நடத்தப்பட்டது.
தமிழகத்தில் 14 நகரங்களில் உள்ள 188 மையங்கள் உட்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் 2,500இற்கும் மேற்பட்ட மையங்களில் பரீட்சை நடந்தது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என 11 மொழிகளில் பரீட்சை நடைபெற்றது.
நாடு முழுவதும் 15 இலட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் விண்ணப்பித்தனர். இதில் 14 இலட்சத்து 10 ஆயிரத்து 754 பேர் (93 சதவீதம்) பரீட்சை எழுதினர். தமிழகத்தில் இருந்து 1 இலட்சத்து 40 பேர் விண்ணப்பித்தனர். நாடுமுழுவதும் 1 இலட்சத்து 8 ஆயிரத்து 621 பேர் பரீட்சையில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






