.பி.எஸ்., பி.டி.எஸ். மேல் படிப்புக்காக இடம்பெற்ற நீட் பரீட்சையில், 56.5 சதவீத மாணவ, மாணவிகள் இந்திய அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அத்துடன், தேசிய அளவில் ராஜஸ்தான் மாநில மாணவன் நலின் கந்தேல்வால் இந்தப் பரீட்சையில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
கடந்த மே 5ஆம் திகதி நடைபெற்ற நீட் பரீட்சையின் முடிவுகள் இன்று வெளியாகின. நாடு முழுவதும் 15இலட்சத்து 19ஆயிரத்து 375 பேர் விண்ணப்பித்தனர். இதில் 14 இலட்சத்து 10 ஆயிரத்து 754 பேர் (93 சதவீதம்) பரீட்சை எழுதினர். ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 621 பேர் பரீட்சையில் பங்கேற்கவில்லை.
இன்று வெளியாகிய முடிவுகளின் படி 4.45 இலட்சம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதோடு, 3.51 இலட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும் முதல் 50 இடங்களில் மாணவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். 7 மாணவிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளார்கள். முதல் 10 இடங்களில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மாதுரி ரெட்டி என்ற மாணவி மட்டுமே இடம்பெற்றுள்ளார்.
மாநிலங்களைப் பொறுத்தவரையில் அதிகபட்சமான தேர்ச்சி விகிதத்தை டெல்லி பெற்றுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்களில் 80 சதவீதம் பேர் அம்மாநிலத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 39.56 சதவீதம் தேர்ச்சி இருந்த நிலையில், இந்த ஆண்டு 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நீட் தேர்வில் 4 மாணவர்கள் நியாயமற்ற வகையில் சில நடைமுறைகளைக் கடைபிடித்து தேர்வு எழுதியதாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர்களின் முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






