நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மற்றுமொரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த மோனிஷா என்ற மாணவியே இன்று (வியாழக்கிழமை) தற்கொலை செய்துகொண்டார்.
நீட் தேர்வுக்குக்காக கடந்த ஒராண்டாக புதுச்சேரியில் தனியார் பயிற்சி மையத்தில் நீட் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மன வருத்தத்தில் இருந்த அவர் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் குறித்த மாணவி 3 பக்கங்களில் கடிதம் எழுதி வைத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்த விசாரணை இடம்பெற்றுவருகிறது.
இதேவேளை, நீட் தேர்வில் தேர்ச்சிபெற முடியாத காரணத்தால் திருப்பூரில் ரிதுஸ்ரீ என்ற மாணவியும், தஞ்சாவூரில் வைஷ்யா என்ற மாணவியும் நேற்று தற்கொலை செய்துகொண்ட நிலையில் மீண்டும் ஒரு உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது.
இதனிடையே, நீட் தேர்வு முடிவால் தமிழகத்தில் இரண்டு நாட்களில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், நீட் தேர்வை இரத்துசெய்ய தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர்.





