
கடத்தப்பட்ட பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருள் அட்டாரி எல்லையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலம் வழியாக இந்தியாவுக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு தலைமையக அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சுங்கத்துறை, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் எல்லை பாதுகாப்புப் படையினர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்ட 2700 கோடி ரூபாய் (இந்திய ரூபாய்) மதிப்பிலான 532 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் பிடிபட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உப்பு மூட்டைகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் பொதிகளை சுங்கச்சாவடி சோதனையின்போது பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
