
காவிரி டெல்டா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளில் மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இன்றைய தினமும் (செவ்வாய்க்கிழமை) ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் ரயில் மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டோர், தஞ்சை ரயில் நிலையத்தில் திருச்சி, மயிலாடுதுறை பயணிகள் ரயில்களை மறிக்க முயன்றபோது பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மேலும் விவசாயத்தை அழிக்கக் கூடிய திட்டத்திற்கு தமிழக அரசு உடந்தையாக செயற்படுவதாக கூறி, தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள், விவசாயத்தையும் மக்களையும் பாதிக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்த முயன்றால் போராட்டங்கள் தீவிரமாகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போதே 100க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
