புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அமுல்படுத்த 10 நாட்கள் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி நிர்வாகத்தில், ஆளுநருக்கு அதிகாரம் இல்லையென சென்னை உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அமுல்படுத்தக்கூடாது என்றும் ஆளுநர் கிரண்பேடி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு மீதான வழக்கின் விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) உச்ச நீதிமன்றம் எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது கிரண்பேடியின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
அதனைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி, “புதுச்சேரி மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளமையினால் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் அல்லது கொள்கை முடிவு எடுக்க தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.
இதன்போது சட்டத்தரணியின் கருத்துக்கு பதில் வழங்கிய நீதிபதிகள், “இடைக்கால உத்தரவுகள் எதையும் பிறப்பிக்க நாங்கள் விரும்பவில்லை.
எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ள புதுச்சேரி அமைச்சரவை முடிவை அமுல்படுத்த 10 நாட்கள் தடை விதிக்கின்றோமென கூறி, வழக்கின் விசாரணையை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.





