
தமிழகத்தின் சில மாவட்டங்களில் நாளை முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு இந்த அனல் காற்று வீசும் என்பதோடு, வெப்பத்தின் தாக்கமும் அதிகரிக்கும் என ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நாளை முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குமரிமுனைப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும் வெப்பசலனம் காரணமாகவும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 6 செ.மீ. மழையும், நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் 4 செ.மீ. மழையும், திண்டுக்கல்லில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மேலும், கோவை பெரியநாயக்கன் பாளையம், ஈரோடு, மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
