LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, May 14, 2019

தமிழருக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை நினைவுபடுத்தும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் – விக்கி

முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்தை ஞாபகப்படுத்துவதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து அவர்களின் உரிமைக்கான போராட்டத்தை சர்வதேச சமூகத்தின் உதவிகளுடன் நசுக்கியதை போல் தற்போது முஸ்லிம் மக்களை பயங்கரவாதிகளாக சித்திரித்து அவர்களின் அரசியல் மற்றும் பொருளாதார பலத்தை மழுங்கடிக்கும் கைங்கரியங்கள் நடந்தேறுவதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் மக்களுக்கு எதிராக அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறைகளைக் கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளதாவது, “உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு பல நாட்கள் கடந்துள்ள நிலையில் முஸ்லிம் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறைகளின் பின்னணியை ஆராய்ந்து பார்க்கும்போது இது நன்கு திட்டமிட்ட தொடர் நடவடிக்கை ஒன்றின் அங்கம் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தவேளை வன்முறையாளர்கள் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் பொலிஸ் நிலையங்களுக்கு சில மீற்றர்கள் தொலைவில் அவர்களின் சொத்துக்களை நாசம் செய்ததாகவும் வெளிவரும் செய்திகள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்தை ஞாபகப்படுத்துகிறது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் பலவீனப்படுத்தி அழிப்பதற்கு மற்றொரு சிறுபான்மை இனத்தை பல்வேறு வழிகளிலும் தந்திரமாக பயன்படுத்தின. சிங்கள அரசாங்கங்களும் படையணி இயந்திரமும். கடந்த காலங்களில் எமது இரு சமூகங்களையும் மோதவிட்டு வெற்றிகரமாக இவை செயற்பட்டுள்ளன.

விடுதலைவேண்டி போராடிய தமிழ் மக்களை இன அழிப்பு யுத்தத்தின் மூலம் பலவீனப்படுத்தியுள்ள சிங்கள பேரினவாதத்தின் பார்வை தற்போது எமது முஸ்லிம் சகோதரர்களின் மீது திரும்பியிருக்கின்றது. எவ்வாறு ஆரம்ப காலங்களில் தமிழ் மக்களின் பொருளாதார, சமூக கட்டமைப்புக்கள் இலக்கு வைக்கப்பட்டனவோ அதேபோல, இன்று முஸ்லிம் மக்களின் பொருளாதார, சமூக கட்டமைப்புக்கள் இன வன்முறை என்ற போர்வையில் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

கடந்த கால அரசாங்கங்களின் அனுசரணையுடன் வளர்க்கப்பட்ட முஸ்லிம் பயங்கரவாத சக்திகளே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டன என்பதை அரசாங்க அமைச்சர்களே வெளிப்படையாக கூறியுள்ளனர்.

இந்த உள்நாட்டு பயங்கரவாத அமைப்புக்களுக்கு வெளிநாட்டு பயங்கரவாத சக்திகளுடன் ஏற்பட்டுள்ள தொடர்புகளை முடிந்தளவுக்கு பயன்படுத்தி ஏனைய சமூகங்களை அடக்கி ஆள்வதற்கும் சர்வதேச அனுகூலங்களை பெற்றுக்கொள்வதற்கும் முயலும் பேரினவாதத்தின் திட்டங்களுக்கு நாம் மீண்டும் பலியாகிவிடக்கூடாது.

இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் புத்திஜீவிகளும் அரசியல்வாதிகளும் கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சமயோசிதமாக செயற்பட வேண்டும். இராணுவம் மூலமாக சிறுபான்மையினரை இருந்த இடம் தெரியாமல் அழிக்க முற்பட்டால் அதனை முறியடிக்க நாம் யாவரும் தயாராக வேண்டும்” என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7