
ஏனைய தரப்பினருடன் இணைந்து அமெரிக்க – ஈரான் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஓமான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டு டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஓமான் வெளியுறவுத்துறை அமைச்சர் யூசுஃப் பின் அலாவி பின் அப்துல்லா, கடந்த திங்கட்கிழமை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரை தெஹ்ரானில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்நிலையில், குறித்த சந்திப்பை மேற்கோள் காட்டி இந்த விடயம் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான், வல்லரசு நாடுகளுடன் 2015ஆம் ஆண்டு அணு ஆயுத ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. இவ்வொப்பந்தம் ஈரான் அணு ஆயுத செயற்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரவும், அதற்கு ஏற்ப அந்நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை திரும்பப் பெறவும் வழிவகுக்கிறது.
இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு அதிரடியாக விலகியது. இதனையடுத்து அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.
