பிரான்ஸின் லியோன் நகர பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய, சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பிரான்ஸின் லியோன் நகர பகுதியில் வெதுப்பகம் ஒன்றிற்கு முன் வைக்கப்பட்டிருந்த பொதி வெடித்தமையினால் சம்பவத்தில் 13 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் உள்ள சி.சி.ரி.வி. ஆதாரத்தை கொண்டு சந்தேகநரின் ஒளிப்படத்தை பொலிஸார் வெளியிட்டனர். இதனை அடுத்து பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் பொலிஸ் மற்றும் பிரான்சின் உள்நாட்டு பாதுகாப்பு சேவையினர் ஒன்றிணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 24 வயதான ஒருவர் இன்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக இன்னொரு ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இருப்பினும் உறுதியான தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 8 வயது சிறுமி உட்பட, குறைந்தபட்சம் 13 பாதசாரிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியிருப்பதாகவும், எவருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





