LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, November 14, 2018

வாழும் பிரபஞ்சத்தின் நுண்மைகளைப் பேசும் எஸ்தர் கவிதைகள்.


வாழ்வின் இருத்தலியலில் இருந்து கவிதையை நகர்த்தும் எஸ்தர் பெண் மனதின் நுண்ணிய தவிப்பை சொற்களைக் கொண்டு தனித்துவமாக இயங்குகிறார்.எளிமையான மொழி பிரதிகள் முழுக்க உருளும் கணங்களை ஒரு வாசிப்பாளன் கண்டு கொள்கிறான்.
எஸ்தர் இலங்கையின் எழில் நகரங்களில் ஒன்றான மலையகம் ஹட்டனில் பிறந்தவர் என்பதால் பிரதிகளில் மலையக மணம் தத்ரூபமாக வாசகனுக்குள் எழும்புகிறது. மற்றொரு பார்வையில் தனிமனி வாழ்வியலின் ஒரு வடிவமாக இருக்கின்ற காதலின் சுவாதீனமான உறவு முறைமை பிரதிகளில் வேரூன்றி இருப்பதை ஒரு வாசிப்பாளனின் கவிதா அனுபவம் காட்டித் தருகிறது.
வாழும் பிரபஞ்சத்தின் நுண்மைகளை சொற்களால் அழகு படுத்தும் பணியே கவிதை எழுதுதல் என கூறமுடியும்.தனி மனிதனுக்குள் உயிர் வாழும் வாழ்வியலின் அத்தனை அனுபவங்களையும் பிரதிக்குள் கொண்டு வரும் கலைநுட்பம் கவிதை எழுதலின் மற்றுமொரு விசித்திரமாகும்.வாழ்வின் பிரதியை புனைவுக்குள் கொண்டு வந்து கவிதை நிகழ்த்தும் புனைவாளன் இயற்கையின் பிரதிபலித்தலை தனது புனைவுகளில் கெண்டுவர தவறுவதில்லை.இது புனைவாளனின் தொன்ம தொப்புள் கொடி உறவாக இருந்து வருகிறது.அவ்வாறு வாழ்வியலின் பிரதிகளை தனது கவிதைகளில் பரப்பி இயற்கையின் புலத்தை விசாலமாக தனது புனைவுகளில் பிரதியாக கொண்டு வரும் கவிஞராக இருக்கிறார் எஸ்தர்.
புலன் அனுபவங்களை புனைவில் இணைத்துக் கொள்ளும் எஸ்தர் கடினமான ஒரு காரியமாக இருக்கின்ற மொழி தன்மைக் கவிதைகளை வாசிப்பாளனுக்கு தரவிரும்பவில்லை அவரது அதிகபட்சமான கவிதைகளில் இந்த தன்மை தென்படுவதை வாசிப்பாளன் உணரமுடியும்.

இவ்வாறான பிரதிகளை எல்லாப் படைப்பாளிகளாலும் தனது புனைவுகளில் கொணடு வரமுடியாது.மாறாக அதனை நிகழ்த்திக் காட்டும் சூட்சுமத்தை எஸ்தர் கையாளுகிறார்.
சில எளிமையான கவிதைகளைப் போல் சில எளிமையான கேள்விகளையும் எஸ்தர் கவிதைகள் வாசிப்பாளனை நோக்கி முன் வைப்பதையும் அக்கேள்விகளுக்கான பதில்களாக எஸ்தர் பிரதிகளுக்குள்ளேயே வைத்திருப்பதும் பிரதி மீதான இரணடாம் வாசிப்புக்கான தருணங்களை வேண்டி நிற்பவை.இவ்வாறான பிரதிகளில் காதலின் ஆழ்மனத் தவிப்பு தன்மை குவிந்து கிடப்பதையும் வாசிப்பு அனுபவங்களாக தருகிறார்.
எஸ்தரின் கவிதைகளுக்கு எதிர்வினைகளும்,கூர்மையான விமர்சனங்களும் முன் வைக்கப்படவில்லை என்ற குறைதனை உடைத்து அண்மையில் மலையகம் ஹட்டனில் நடந்த எஸ்தரின் கால் பட்டு உடைந்தது வானம் பிரதி அறிமுக நிகழ்வில் இலக்கிய செயற்பாட்டாளர் முரளிதரன் ஒரு புனைவாளனுக்கான அக்கறையோடு முன் வைத்த கருத்துக்கள் எஸ்தரின் கவிதை நீட்சிக்கு உத்வேகத்தை தந்திருக்கிறது.
எஸ்தரின் கால் பட்டு உடைந்தது வானம் தொகுதியிலிருந்து

உடைபடும் விம்பம்.

உன்னைப் பற்றியதான விம்பம்
இந்த பேரண்ட வானத்தைப் போல
எல்லைகளற்றுப் பரந்து பிரமித்துக் கிடக்கிறது
பெரும் தெருவொன்றில்
ஒரு பூனையைப் போல்
நீ என்னைப் பின்தொடரலாம்
காதல் கொண்ட காலங்களை நெய்து
எனக்கொரு அங்கியை பரிசளித்துவிட்டு
உன் வழியில் நீ நடக்கிறாய்
என் பிறந்த நாளுக்கென்று
பெரும் வனங்களில் அலைந்து
ஆம்பல்களை அள்ளி வரலாம்
தேன் சிட்டுகளின் வண்ணத்தில்
முத்தமொன்றை வரையலாம்
இப்படியே நானொரு
பசித்த புலியாய்
என் வனங்களில் அலைந்து கொண்டிருக்கிறேன்
நீயோ பசிக்காக
நான் வளர்த்த நிலவுகளைக்
கொள்ளையடித்துக் கொண்டு
முகமூடிகளுடன் ஓடிக் கொண்டிருக்கிறாய்
இப்போது
உன் விம்பம் சிறுச் சிறுக புள்ளியாகி
நான் பிரமித்த
உனதான அண்டவெளியும்
பாயைப் போல் சுருட்டப்படுகிறது.

மெய்மையின் பக்கங்களை அதன் உருவம் சிதைந்துவிடாமல் தான் சார்ந்த காதல் அடையாளங்களையும் எஸ்தரின் கவிதைகளில் அதிகபட்சமாக பெயர்த்து தருகிறார்.இதனூடாக பிரதியின் வலிமையை சொல்ல முனைவதோடு அரசியல் வடிவத்தை நேரடியாகவும் முற்றிலும் அதற்கு மாறுபட்டும் பிறிதொரு கோணத்தில் அடையாளமிடுகிறார்.குறிப்பாக அனுபவம் சார்ந்த தன் சூழலின் கேள்விகளுக்கே அரசியல் அடையாளத்தை அவரது கவிதைகளூடாக வாசிப்பாளனிடம் உரையாடுகிறார்.

இந்த வனத்தில்தான் பெயர் தெரியாத
பூக்களையெல்லாம் பறித்தோம்
இந்தக் கடலில்தான்
ஒரு நதியைப் பிரித்தோம்
இந்த மணலில்தான்
கால் தடத்தை விட்டுப் போனோம்
இந்த குருதி காய்ந்த மண்ணில்தான்
கடைசியில் ஒருவரை ஒருவர்
தழுவிக் கொண்டோம்
இந்தத் தெருவில்தான்
உனக்கும் எனக்குமான
கவிதைகளை அலையவிட்டோம்
இந்த மலையில்தான்
நம் மூதாதையருக்கு
இரங்கல் எழுதினோம்
அன்பே இந்ந மஞ்சத்தில்தான்
என்னை ஒரு நாள்
கடவுளுக்குப் படைக்கும் பக்தனின்
பூக்களாய் அள்ளியெடுத்தாய்
இந்த இரவில்தான்
விடுகதைக்கு விடையை
நாளை கேட்பதாக விடைபெற்றாய்
ஆலம் விழுதுகள் பருத்துத் தொங்கும்
வேர்கள் மட்டும் தொங்குகிறது
நாம்
வேரற்றுப் போனோம்
இறுதியில் நாடற்றும் போனோம்
கண்களைத் தின்ற கண்ணீர் மட்டும்
உனக்கும் எனக்கும்
கொளுந்துவிட்டு எரிகிறது.

என்ற கவிதையின் சில வரிகளை வாசிப்பாளன் வாசிக்கின்ற போது எஸ்தர் தன் சூழலின் அல்லது பொதுத் தன்மை கொண்ட பிரதியை வாசிப்பாளனுக்கு தருகின்றார்.கவிதையின் ஒவ்வொரு வரிகளும் வாசிப்பாளனுக்குள் உயிர்தெழும் அதிசயத்தை நிகழ்த்துவதோடு அவனுக்குள் உரையாடவும் துவங்குகிறது.
எஸ்தரின் கவிதைகளுடன் ஒரு வாசிப்பாளனாய் பயணப்படும் பல தருணங்களில் தனிமனித வாழ்வியலின் பிரதியை அவர் மொழியல் சார்ந்து உருவாக்கும் விதம் என்னை அவர் பிரதிகளுடன் மேலும் மேலும் இணைத்துக் கொள்ளும் தன்மையை அமைத்துக் கொள்கிறது.மனப் பிரதியின் உரையாடலை எளிய தொனியில் பிரதி முழுக்க காணமுடிவதில்லை என்ற குற்ற சாட்டு எஸ்தரின் கவிதைகளுக்கு இல்லை மாற்றமாக அதனை தாண்டி புனையும் நுட்பம் எஸ்தரிடம் மட்டுமே குவியல் குவியலாக இருப்பது அதிசயமே.
எஸ்தரின் இன்னுமொரு
ஒரு கும்மிருட்டாக என்னை மூடிக் கொண்டாய்
ஆங்காங்கே மினுங்கும் நட்சத்திரங்களும்
இருளின் அலையும் குப்பி விளக்குகளையும்
பார்த்தோம்
இந்த இரவு உனக்குப் பிடித்திருக்கிறதா
என்று கேட்டாய்

வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன்
வழியில்
உன் கரங்கள் முளைத்து
என்னை கட்டிக்கொள்கிறது

பத்திரமாய் நான் சேர.

என்ற பிரதியை முன் வைத்து பகிர்ந்து கொண்டால் இந்தப் பிரதி முழுக்க ஒரு வாசிப்பாளனாய் என்னை அற்பும் செய்த பிரதியென்று சொன்னால் அது மிகையாகாது."வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன் வழியில் உன் கரங்கள் முளைத்து என்னை கட்டிக்கொள்கிறது.."எத்தனை கவிதைப் பரவசம் இதனை நுகரும் போது வந்துவிடுகிறது.ஆங்காங்கே ரெக்கைகள் முளைத்து இந்த பிரதியூடாக வாசிப்பானை மேலெழுப்புகிறது.அதுமட்டுமல்லாமல் உளவியல் உணர்வோடு இதன் நுகர்முனை பண்புகளை பட்டியலிட முன் வரும்போது பெரும் ரணத்தின் துயர் அதிகபட்சமாய் பிரதியிலும் வாசிக்கும் மனதிலும் பரவிவிடுகிறது.ஆக, தெளிந்த சொற்களின் வடிவத்தில் கவிதை தரும் சூட்சும் எஸ்தரிடம் ஒரு தோப்பாகவே கனிந்து கிடக்கிறது.
"ஒரு கும்மியிருட்டாக என்னை மூடிக் கொண்டாய்.."இந்த சொற்தொடரூடாக மிகச் சிறந்த கட்டுடைத்தலை இங்கே ஒரு வாசிப்பாளன் கண்டுகொள்ள முடிவதோடு பெரும் அனுபவத்தை இந்த சொற்கள் நிரப்பி வைத்திருப்பதையும் முழுமையான காட்சியாகக் கூட காணமுடிகிறது.இப்படி இந்த பிரதி முழுக்க வாழ்வியல் அனுபவம் பேசி நிற்கிறது.
எஸ்தரின் பிரதிகள் குறித்து நிறையவே பேசவேண்டியிருக்கிறது அதனை விரைவில் பொதுத் தளமொன்றில் பகிர்ந்து கொள்ளலாம் என்கின்ற நம்பிக்கையோடு கவிதை.

கால்களை மட்டுமே நனைக்கிறேன்
உடலை எட்டித் தழுகிறது
கடல்
அலைகள் கடலை வரைந்து கொண்டிருக்கின்றன
கடல் மீது நிரந்தரமாய்த் துயிலும்
கவலை மறந்த வானம்
நதிகளின் நச்சரிப்பில் சிலிர்த்த துவண்டு பெருகும்
தவழும் கரைகளிலே கடல்

கடல் கால்களில் துயிலும் ஆமைகள்
கருக்கட்டும் நாளில்
கடலைச் சுமந்து கரை திரும்பும்
அக்டோபஸ்கள்
தன் கரங்களில் அள்ளிப் போவதை
யார் தடுப்பது
கடல் மீது எல்லோருக்கும் மோகம்
கடலைவிட.

எஸ்தர் கவிதைகளூடாக இயற்கைக்குள் நுழைத்து வாசிப்பாளனின் மனப்பிரதியெங்கும் ஊடுருவிப் பறக்கிறார் .பிரதிகள் புரிந்து கொள்வதற்காகவே எழுதப் படுகின்றது.புரியாத்தன்மையோடு வாசிப்பாளன் பயணப்பட மாட்டான்.வாசிப்பாளனின் மனப் பிரதியில் சுவாதீனமான மொழிப்பரப்பை நிலைகொள்ளச் செய்யும் புனைவாளனுக்கு வரலாற்றில் இடம் உண்டு.அந்த இடத்தை எஸ்தரின் கவிதைகள் உருவாக்கிக் கொள்ளட்டும்.
ஏ.நஸ்புள்ளாஹ்.





 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7