சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேன்முறையீடு செய்தமைக்கு தி.மு.க. தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், “உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த நேரத்தில் வாக்காளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேன்முறையீடு செய்யாது என வாக்குறுதியளித்தார். அதை முன்னிறுத்தி வாக்கும் கேட்டார்.
தேர்தல் முடிந்து தமிழகத்தில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி வரலாறு காணாத தோல்வியடைந்த பிறகு, எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இப்போது உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருப்பது தமிழக மக்களுக்குச் செய்யும் மன்னிக்க முடியாத துரோகமாகும்.
அத்துடன், தமிழகத்தில் தோல்வியைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, பதவியேற்ற அடுத்த நாளே மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதனிடையே, எடப்பாடி அரசின் எடுபிடி அத்தியாயம் இரண்டாவது முறையாக பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் தொடங்கிவிட்டது என்பதையே இந்த மேன்முறையீடு காட்டுகிறது.
பதவியேற்று கையெழுத்திட்ட பேனாவின் மை காய்வதற்குள் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பச்சைத் துரோகம் செய்ய பா.ஜ.க. அரசு துடிப்பதையும், அ.தி.மு.க. அரசு அதற்கு சரணாகதி அடைந்து தூபம் போடுவதையும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆகவே தமிழக மக்களின் வாழ்வாதாரத்துடன் பா.ஜ.க. அரசு இனிமேலும் விபரீத விளையாட்டு நடத்தாமல், சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை செயற்படுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தில் செய்துள்ள மேன்முறையீட்டை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.
முரட்டுத்தனத்தின் மூலம் மக்களை அடக்கிவிடலாம் என்பதைக் கைவிட்டு ஆக்கபூர்வமாக வழிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும்” என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.






