பிரித்தானிய பிரதமர் பதவிக்கு வேறொருவர் நியமிக்கப்பட்டால், பிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பாக அவருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என அயர்லாந்தின் துணைப்பிரதமர் சைமன் கொவேனி தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு தெரேசா மே-க்கு கொன்சர்வேற்றிவ் கட்சி உறுப்பினர்கள் கடுமையான அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து ஜூன் மாத ஆரம்பத்தில் இடம்பெறவுள்ள தனது பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நான்காவது பாராளுமன்ற வாக்கெடுப்பின் பின்னர் பதவி விலகல் திகதியை அறிவிப்பதற்கு பிரதமர் சம்மதித்துள்ளார்.
பிரதமரோ தெரேசா மே நேர்மையானவர் எனத் தெரிவித்துள்ள கொவேனி கொன்சர்வேற்றிவ் கட்சி உறுப்பினர்களின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆளுமை மாறமுடியும் ஆனால் உண்மை மாறமுடியாது எனவும் அதனால் பிரதமர் மாறினாலும் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டரை வருடங்களுக்கும் மேலாக பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மீள்பரிசீலனைக்கு உட்படுத்த முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே கூறியுள்ளது எனவும் புதிய பிரதமர் மாற்றப்பட்டாலும் இதுவே தமது நிலைப்பாடு எனவும் கொவேனி தெரிவித்துள்ளார்.
மேலும் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான ஐரிஷ் அரசாங்கத்தின் திட்டமிடல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் எதுவுமின்றியே பிரித்தானியா வெளியேறுமென தாம் அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





