தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் தனிநபர்கள், அரசு ஊழியர்களின் தொடர்பு குறித்தும் விசாரிக்கப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த அர்ஜூனன் உட்பட 7 பேர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீஸார் மற்றும் அதிகாரிகள் மீது அளிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சிபிஐக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனால் இந்த உத்தரவுப்படி போலீஸார் மற்றும் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யவில்லை. இதனால் சிபிஐ இணை இயக்குநர் பிரவீன் சின்ஹா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில், துப்பாக்கிச்சூடு தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், சிப்காட் காவல் ஆய்வாளர் ஹரிகரன், தூத்துக்குடி தெற்கு காவல் ஆய்வாளர் மீனாட்சிநாதன், காவல் ஆய்வாளர் டி.பார்த்திபன், துணை வட்டாட்சியர் (தேர்தல்) சேகர், மண்டலத் துணை வட்டாட்சியர் கண்ணன், வட்டாட்சியர் சந்திரன் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது. இவர்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ எஸ்பி ஏ.சரவணன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், தூத்துக்குடியில் மே 22, 23 ஆகிய தேதிகளில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவுபடி சிப்காட் காவல் நிலையத்தில் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் 20 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீது சிபிஐ 8.10.2018-ல் மறு வழக்கு பதிவு செய்தது.
மனுதாரரின் புகாரின் பேரில் அடையாளம் தெரியாத காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக எஸ்பி தலைமையில் பிற மாநில சிபிஐ கிளைகளில் பணிபுரியும் அதிகாரிகளைக் கொண்டு சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முழு உண்மையை கண்டுபிடிப்பதற்காக தூத்துக்குடி மில்லர்புரத்தில் சிபிஐ முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தனிநபர்கள், அரசு ஊழியர்கள் தொடர்பு இருப்பது, உடந்தையாக இருந்தது தெரியவந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மனுதாரர் தனது புகாரில் தெரிவித்துள்ள நபர்களின் தொடர்பு குறித்தும் விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் புகாரையும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க சிபிஐக்கு உத்தரவிட்டனர். பின்னர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.






