முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று ஆஜரானார்.ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு, அப்பல்லோ மருத்துவர்கள் என 130-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. அதன்படி, சென்னை, எழிலகத்தில் அமைந்துள்ள விசாரணை ஆணையம் முன்பு நேற்று திங்கள்கிழமை (ஜன.21) காலை 10.20 மணிக்கு விஜயபாஸ்கர் ஆஜரானார். ஏழு மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணை மாலையில் 5.45 மணியளவில் நிறைவடைந்தது.
விஜயபாஸ்கரிடம் சசிகலா தரப்பு வழக்குரைஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். அதேபோன்று ஆணைய வழக்குரைஞரும் சில கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்கு விஜயபாஸ்கர் அளித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு இன்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜராகியுள்ளார்.





