
உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் 15-ஆவது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின (பிரவாசி பாரதிய திவஸ்) மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மோரீஷஸ் பிரதமர் பிரவீண் ஜகந்நாத் பங்கேற்கிறார். பிரதமர் மோடியை சந்திக்கும் அவர், இரு தரப்பு உறவு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேச இருக்கிறார்.
புதிய இந்தியாவை உருவாக்குவதில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்கு என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
முன்னதாக, திங்கள்கிழமை இளையோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
முன்னதாக, பிரதமர் மோடியுடன் இணைந்து மாநாட்டில் பங்கேற்பதற்காக வாராணசிக்கு திங்கள்கிழமை வந்த மோரீஷஸ் பிரதமர் பிரவீண் ஜகந்நாத்தை, வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார். தொடர்ந்து சுஷ்மா ஸ்வராஜை, ஜகந்நாத் சந்தித்துப் பேசினார். அப்போது, இரு தரப்பு உறவை மேம்படுத்துவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
வழக்கமாக ஜனவரி 9-ஆம் தேதிதான் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் நடைபெறும்.
ஆனால், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் (அலாகாபாத்) நடைபெறும் கும்பமேளா மற்றும் 70-ஆவது இந்திய குடியரசு தின விழாவிலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்க வசதியாக இந்த மாநாடு இந்த முறை ஜனவரி 21 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்திய வெளியுறவுத் துறைஅமைச்சகமும் உத்தரப் பிரதேச அரசும் ஒன்றிணைந்து இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. பிரதமர் மோடியின் தொகுதியான வாராணசியில் இந்த மாநாடு நடைபெறுவது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார். 85 நாடுகளில் இருந்து 4,000-க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.





