சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களையும் விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சீன ஜனாதிபதி சி சின்பிங்கிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட இராஜதந்திரிகளினால் சீன ஜனாதிபதி சி சின்பிங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் எழுதப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சீனப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் இராஜதந்திரி மைக்கல் கொவ்ரிக் (Michael Kovrig), வர்த்தகர் மைக்கல் ஸ்பேவொர் (Michael Spavor) ஆகிய இருவரும் கடந்த மாதம் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தநிலையிலேயே அவர்களை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சீன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினைத் தொடர்ந்து Huawei நிறுவனத்தின் துணைத் தலைவர் மெங் வாங்ஸோவை கனடா கைதுசெய்ததற்குப் பதிலடியாக குறித்த கனேடியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.





