கருத்துக்கணிப்புகள் குறித்து பொருட்படுத்தவில்லை என்றும் மே 23-ஆம் திகதி மக்களின் கணிப்பு தெரிந்துவிடும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் திங்கள்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தான் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடத்தப்படும்.
மே-23 க்கு பின்னர் தான் மத்திய அரசில் அங்கம் வகிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். மே 23-ஆம் தேதி டில்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடப்பதாக ஊடகங்களே செய்தியை போட்டுக்கொண்டு கேள்விகளை கேட்கக்கூடாது.
கருத்துக்கணிப்பு முடிவுகள் தி.மு.க.வுக்கு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் அதைப் பொருட்படுத்துவதில்லை. தமிழகத்தில் தி.மு.க. பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கும். மே 23-ஆம் திகதி வெளியாகும் மக்களின் கணிப்புக்காக காத்திருக்கிறோம்” என்றார்.
முன்னதாக, தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உடல் நலம் விசாரித்தார்.
பின்னர் அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த தலைவர்களான துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோருடன் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.





