விலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி, வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டது.
இதன் அடிப்படையில் 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படியை மூன்று சதவீதம் உயர்த்தி, மத்திய அரசு கடந்த பெப்ரவரி 20-இல் அறிவிப்பு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இதனிடையே, மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. இதனால், புதிய அறிவிப்புகள் எதையும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவது பற்றி தேர்தல் ஆணையத்தின் அனுமதியை தமிழக அரசு கோரியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிடுவது பற்றி தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலை வழங்கியது. அதன்படி, நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த பிறகு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிடலாம் எனத் தெரிவித்தது.
இடைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 2019 ஜனவரி 1-ஆம் திகதி முதல் முன்திகதியிட்டு திங்கட்கிழமை அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.





