பாகிஸ்தான் தேசிய தினம் எதிர்வரும் 23ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. தேசியதினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு இந்திய அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களுக்கும் பாகிஸ்தான் தூதரகம் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகின்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்வகையில் பாகிஸ்தான் தேசியதின நிகழ்ச்சியில் இந்தியப் பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 14 ஆம் திகதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 பாதுகாப்புப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. எனினும் இந்த தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகள் மோசமடைந்துள்ளன.
இதேவேளை, புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது






