
தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். இதற்காக அவர், தனது தாயார் ராஜாத்தி அம்மாளுடன் துாத்துக்குடியில் தங்கியுள்ளார். கடந்த 25ம் திகதி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த கனிமொழி, தினமும் தொகுதியின் பல்வேறு இடங்களுக்குச் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அத்துடன், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்காளர்களிடம் வாக்கும் கேட்டு வருகிறார்.
இந்நிலையில், பிரசாரத்திற்காக கனிமொழி புறப்பட்டுச் சென்றவுடன் தாயார் ராஜாத்தி அம்மாள் பல்வேறு கோவில்களுக்குச் சென்று, மகளின் வெற்றிக்காக வழிபட்டு வருகிறார். அதன்படி, நேற்று (26ம் திகதி) காலையில் திருச்செந்துார் முருகன் கோவிலுக்குச் சென்ற அவர், அங்கு நடந்த சண்முகா அர்ச்சனையில் கலந்து கொண்டு மனமுருகி வழிபட்டார்.
பின்னர், கோவில் உள்பிரகாரத்தில் உள்ள மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, புன்னை நகரில் அமைந்துள்ள வனதிருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறுகையில், “’தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் எனது மகள் கனிமொழி வெற்றிபெற வேண்டும் என சுவாமியிடம் வேண்டிக் கொண்டேன். நிச்சயமாக அவர் வெற்றிபெறுவார்” என்று தெரிவித்தார்.
திமுக இயக்கம் கடவுள் வழிபாடுகளை மறுக்கும் தந்தை பெரியார் கொள்கையைப் பின்பற்றுகின்ற கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
