இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தால் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அர்ஜூன் மகேந்திரனை ஒப்படைப்பதற்கு தேவையான பூரண தகவல்கள் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்கனவே சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சிங்கப்பூர் அரசாங்க அதிகாரிகளின் ஊடாக அர்ஜூன் மகேந்திரனுக்கு அழைப்பாணை விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜூன் மகேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மேலும் தெளிவுபடுத்துமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரால் இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக இலங்கை சட்டமா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கிடைத்த அந்த கடிதம் தொடர்பான விடயங்களை சிங்கப்பூருக்கு அனுப்பி வைப்பதற்காக இலங்கையின் சட்டமா அதிபர் தற்போது முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
மேற்குறித்த சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக கூறப்படும் கூற்றினை அடிப்படையாகக் கொண்டு அந்நாட்டு ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.
குறித்த செய்திகளை சுட்டிக்காட்டி இலங்கை ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த செய்திகளை ஒருபோதும் சிங்கப்பூர் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையாக ஏற்றுக்கொள்ள முடியாதென்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்” என ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






