“குழந்தாய் ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே| கையேந்தி நிற்போரை காத்திருக்க வைக்காதே.
பசித்திருப்போரை வாட்டி வதைக்காதே| வறுமையில் வாழ்வோருக்கு எரிச்சலூட்டாதே.
உள்ளம் உடைந்தோருக்கு துயரங்களைக் கூட்டாதே| வறுமையில் உழல்வோருக்குக் காலம் தாழ்த்தாமல்
உதவி செய்.
துன்புறுவோரின் வேண்டுதலைத் தள்ளி விடாதே| ஏழையரிடமிருந்து உன் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே!”
அடுத்தவருக்கு, குறிப்பாக வறியவர்களுக்கு உதவுவது என்பது எங்களுக்குக் கிடைக்கின்ற வரப்பிரசாதமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அது நமக்கு இறைவனால் வழங்கப்பட்ட ஒரு வாய்ப்பு. நாளாந்தம் கூச்சமின்றி தங்கள் கரங்களை நீட்டி பிச்சை கேட்போருக்கு உதவுவதைப் பார்க்கிலும் வாழ்வில் நல்ல இடத்தில் கௌரவமாக வாழ்ந்திருந்து சந்தர்ப்ப வசமாக ஏழையாகிப் போய் கை நீட்டி உதவி கோரத் தயங்கி நிற்கின்ற நடுத்தர வர்க்கத்தினருக்கு சத்தமின்றி காதோடு காது வைத்தாற் போன்று உதவி புரிவதென்பது நமக்குக் கோடி புண்ணியத்தைச் சேர்த்துத் தரும். அவர்களால் இதுவரை வாழ்ந்த வாழ்வைத் தொடர முடியாமலும், இருந்த வாழ்வை விட்டுக் கீழிறங்கி வாழ்வதும் சொல்ல முடியாத துயரத்திற்குரிய நிலையாகும். அப்படிப்பட்டவர்கள் நம்மைக் கேளாமலே நாம் முன் வந்து உதவும்போது அவர்கள் நெஞ்சில் உதிக்கின்ற ஒரு நன்றியுணர்வு இருக்கிறதே, அது நம்மை என்றும் பாதுகாத்து நிற்கும்.
இரண்டாம் நிலை
இயேசுவின் தோளில் சிலுவை
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம்.
அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்
பாரம் சுமக்கப் பழகிவிட்ட தோள்களுக்குப் பஞ்சுப் பொதி ஒரு பொருட்டல்ல.. ..ஆனாலும், பொதி சுமந்து வளைந்துவிட்ட முதுகிற்கு ஓய்வொன்று அவசியம் தேவை.. .. சுமந்து கொண்டு நிற்கின்றதேயென்பதற்காக கழுதையின் முதுகில் சுமையை அடுக்கிக் கொண்டே போவது மனித தர்மத்திற்கே ஒவ்வாதது.
இன்று, மனித வாழ்விலே சுமக்கவென்றே பிறந்துவிட்ட ஜீவன்களெனப் பலபேர் வாழத்தான் செய்கின்றார்கள். .. .. அதே சமயம் தம் சுமையை அடுத்தவர் தோளில் சரித்துவிட்டு சுகம் அனுபவிக்கும் மனிதங்களும் நம் மத்தியில் இல்லாமலில்லை. .. ..
சுமை தாங்கிகள் காலத்தில் நிலைத்து நிற்கின்றன .. ..அவை அடுத்தவர் சுமையை மௌனமாக ஏற்கின்றன. கோடையோ வசந்தமோ .. .. எதுவும் அவற்றை அசைப்பதுமில்லை.
சுமக்கவென்று முன்வரும் மனங்களும், மௌனத்தில் வருவதை வரவேற்கின்றன. வாழ்வில் சுகமும், துக்கமும் அவற்றைக் கலக்குவதில்லை.
இயேசு சுமக்கவென்று வந்த மனிதர், .. .. மனித பாவத்தைத் தன் தோளிலே ஏற்க வந்த மனிதர்.. .. அவரிடம் முணுமுணுப்பிருக்கவில்லை .. .. முகஞ்சுழித்தலும் இருக்கவில்லை. .. ..கடமையைச் சுமையாய்ப் பொறுப்பேற்கிறார். .. வேள்வி செய்யும் மனிதனைப்போல உலகைச் சுத்தமாக்க முழுப்பாவக் கறையையும் தனக்கான சுமையாகத் தம் தோளிலே ஏற்று நிற்கிறார்.
நாம் சுமக்கின்ற மனிதரா? ... .. இல்லை மற்றவர் மேல் பொறுப்பைச் சுமத்துகின்ற மனிதரா?
நம் பழியை நாமே சுமந்ததுண்டா? .. ..இல்லை அடுத்தவர் பக்கமாகக் காயை நகர்த்திவிட்டு, தப்பினோம் பிழைத்தோம் என்று வாழ்பவரா நாங்கள்?
இயேசுவிடம் உறுதி அளிப்போம்:
“என் செய்கையின் பலன் எதுவானாலும் .. .. அதை நானே சுமக்கிறேன் என் இயேசுவே. .. ..என் வாழ்க்கைப் பொறுப்பு எதுவானாலும் .. .. அதை நானே ஏற்கிறேன் என் இயேசுவே .”
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவன.






