கேரளா- பத்தனம்திட்டா, கொன்னி பகுதியைச் சேர்ந்த ரசாக் என்பவரின் மகன் ரபீக் (29) சவுதி அரேபியாவிலுள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 28ஆம் திகதி மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் கடந்த 20ஆம் திகதி சவுதியிலிருந்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதன்போது கொச்சி விமான நிலையத்தில் உடலை பெற்றுக்கொண்ட ரபீக்கின் உறவினர்கள், வீட்டுக்கு எடுத்துச் சென்று இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
அப்போது வீட்டில் வைத்து, அந்த சவப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ரபீக்கின் உடலுக்கு பதிலாக ஒரு பெண்ணின் உடல் இருந்துள்ளது.
இந்நிலையில் இவ்விடயம் குறித்து ஆராய்ந்தபோது ரபீக்கின் உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் தொலைபேசி ஊடாக தகவலை வழங்கிய ஒருவர்,கொன்னிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது இலங்கையைச் சேர்ந்த பண்டார மேனகி என்ற பெண்ணின் உடல் எனவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ரபீக்கின் உடலை திரும்பப் பெறவும், இலங்கை பெண்ணின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும் பத்தனம்திட்டா மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






