“உன்னிடம் உதவி வேண்டுவோரிடத்திலிருந்த உன் கண்களைத் திருப்பிக் கொள்ளாதே| உன்னைச் சபித்திட யாருக்கும் வாய்ப்பு அளித்திடாதே.
ஏழைகள் கசப்பணர்வினால் உன்னைச் சபித்தால், அவர்களைப் படைத்தவர் அவர்களுடைய வேண்டுதல்களுக்குச் செவி சாய்ப்பார்.
மக்களின் அன்புக்கு உரியவனாய் இரு| பெரியோர்களுக்கு தலை வணங்கு.”
‘ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்’ என்பார்கள். கையேந்தி பிச்சை எடுப்பவர் மட்டும் ஏழை என்றாகி விடுவதில்லை. மனதில் தாழ்ச்சியும், உண்மையும், நன்மையும் உள்ளவர்களும் ஏழைகள் தான். நடக்கின்ற அநியாயங்கள் தமக்காயின் மட்டுமல்ல, அடுத்தவருக்கும் ஏற்பட்டு அவர்களும் துன்பப்பட வேலை பார்க்கின்றவர்களுக்கெதிராக உள்ளம் வெதும்பி சாபமிட்டால் அது நிச்சயம் கடவுளால் ஏற்கப்படவே செய்யும். அவர்கள் வாழ்வின் எந்த மட்டத்தில் இருந்தாலும் சரி, அரசியல், சமூக, ஆன்மீகத் தலைவர்களாக இருந்தாலும் இந்த நியதியிலிருந்து தப்பிக்கவே முடியாது. நம் மத்தியில் பலர் இருக்கிறார்கள், தாம் தெரிவு செய்து கொண்ட வாழ்வால் கடவுளுக்கு அடுத்தவர்களாய் தாம் இருப்பதாக எண்ணிக் கொண்டு தம்மால் எதுவும் முடியும் என்கின்ற தோரணையில் சிந்தித்துச் செயல்படுகின்றவர்கள் கடவுளின் சினத்திற்கு ஆளாக வேண்டியே தீரும்.
மூன்றாம் நிலை
தரையடிபட இயேசு
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம்.
அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
நான் என்ற அகங்காரம் தலையிலே ஏறிவிட்டால் நாய் கூட வளர்த்தவனை ஒரு பொருட்டாக எண்ணாது என்கின்ற அளவுக்கு மனிதங்களின் நெஞ்சங்களில் நஞ்சை வளர்த்துவிடுகிறது. .. கொப்பிலே ஏறிய பேயாட்டம் .. .. மனித வாழ்வில் அது போடும் சதிராட்டம்.
“நான்” ஏறி எம் தலையிலே இருந்துவிட்டால் .. .. அடுத்தலன் என்ன ராசாவா? என்று எவருக்கும் ஒரே கேள்வியைத்தான் எழுப்பச் செய்துவிடும். .. .. இதனால் எம் வாழ்வே சரிந்து விழுந்துவிடும்.
மரக்கொப்பொன்று கனத்துவிட்டால் சிறு காற்றுக் கூட அதற்கு ஆபத்துதான். .. .. எந்நேரமும் அது விழும்,.. .. சரியும்! அதற்குப் பிறகு அது உயிர் கொண்ட மரமல்ல.. .. விறகு!
மனித மனங்களில் தாழ்ச்சி விடைபெற்று நாளாகிவிட்ட கொடுமை இன்று இன மட்டத்திலே, மத மட்டத்திலே, மொழி மட்டத்திலே போட்டியும், அழிவுகள் எனவும் கிளம்பியிருக்கிறது. இங்கும் நானா? நீயா? என்பதல்லவா போட்டி ? .. . இங்கு யார் வாழ்வது என்றல்லவா கேள்வி?
உயிர்களுக்கு விலைமதிப்பில்லை என்று யார் சொன்னது? .. .. அதன் விலை ஒரு தோட்டா என்றல்லவா யுத்தச் சந்தையிலே பேரம்? நானே வல்லவன் எனக் காட்டும் போட்டியிலே மிதிபடும் மனித நேயம் .. .. இயேசுவின் வடிவிலே .. .. பாதையின் ஓரத்திலே!
வீழ்ந்து கிடக்கும் இயேசுவிடம் சொல்லுவோம்: “ நான் என்ற எண்ணம் எம்மைச் சதியிலே வீழ்த்தினாலும் இயேசுவே.. .. சகதியில் நாம் அமிழ்ந்து விடாதபடி கை தாரும் இயேசுவே.”
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவன.






