“பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருந்து விடாதே.
ஞானம் பேச்சில் புலப்படும்| நற் பயிற்சி வாய் மொழியால் வெளிப்படும்.
உண்மைக்கு மாறாகப் பேசாதே.
உன் அறியாமைக்காக நாணம் கொள்.
உன் பாவங்களை அறிக்கையிட வெட்கப்படாதே| ஆற்றின் நீரோட்டத்தை தடை செய்ய முயலாதே”
உண்மைக்காக, நீதிக்காக, அடுத்தவர் நன்மைக்காக பேச வேண்டிய இடத்தில் பேசாது விடுவது பெருந்தவறாகும். முகத்தாட்சணியம், நம் உயிர், பொருள் பண்டங்கள் மேல் உள்ள ஆசை, பணம், பதவி, பட்டங்களுக்காக வாய் மூடி மௌனியாய் இருப்பது அநியாயமான செயலாக அமைந்து விடும். அநீதிக்குத் துணை போவதாக அமைந்து விடும். உரியவருக்கு உரிய நீதி வழங்கப்படுவதை அது தடுக்கும். எது சரி, எது பிழை என்பதை ஞானம் நமக்குக் காட்டித் தரும்போது, தவறு நடந்தால் அது தவறு என்றும், சரியென்றால் அது சரியென்றும் வாய் திறந்து பேசுவது மனித குலத்திற்கு நன்மையே தரும். அது தருமமும் ஆகும். பேசாமை என்பது கோழைத்தனமாக அமைந்து விடும், காலந்தாழ்த்திப் பேசுவது கூட இழைக்;கப்பட்ட அநீதியை திருத்திக் கொள்ள உதவாமற் போய்விடும். நாம் தவறிழைத்தால் உரிய போதில் உரியவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வது நீதியானது. அத் தவறை உணர்ந்து வேண்டும் மன்னிப்பு நமக்குப் பெருமை சேர்க்கும். பவுல் அடியார் நீரோட்டத்திற்கெதிராக செயற்பட முனைந்து நின்றவர்தான். அதைத் தக்க வேளையில் இறைவன் தடுத்து நிறுத்தி ‘நாட்டுக் கட்டையை எதிர்த்து உதைப்பது கடினம்’ என்று உணர்த்தி வைத்தார். அதன் பிறகு நீரோட்டத்திற்கெதிராக நீச்சல் போடவேயில்லை. அதனோடு சேர்ந்து நீந்தினார்| உண்மைக்காக வாய் திறந்து பேசி போராடினார். அதனால் இறைவனுக்கு உகந்தவரானார்.
ஒன்பதாம் நிலை
வீழ்த்தப்பட்ட இயேசு
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம்.
அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்
அடிமேல் அடிவைக்க அம்மியும் நகர ஆரம்பிக்கும் என்று சொல்வார்கள். மீண்டும் மீண்டும் தூண்டப்படும் பலயீனமான மனது தவறும்!
நகருகின்ற பாதையில் தடையொன்றைக் கண்டுவிட்டால் .. ..ஊருகின்ற நத்தை கூட சுற்றிக் கொண்டு போகும் .. ..! ஆனால் மனிதன் .. ..? சாக்கடை என்று அறிந்த பின்னும், பின்னர் சந்தனத்தைத் தெளித்துக் கொள்ளலாம் என்று .. .. சாக்கடைக்குள் இறங்கி விடுபவன்.
மற்றவர் தவறிலே தம் வயிற்றை வளப்படுத்திக் கொள்ளும் மனிதங்கள் மண்ணில் மலிந்தே கிடக்கின்றன. .. ..!
மற்றவனது வீழ்ச்சியில் தம் வாழ்வைப் பலப்படுத்திக் கொள்ளும் மனிதங்களும் இங்கு இல்லாமலில்லை.
பிறர் தவறினைக் கண்டு சிரிப்பவர் தமக்கு அவர்தம் வாழ்வே சிரிப்பாய் அமைந்துவிடும். .. .. தவறுபவர் தம்மைத் திருத்துவார் தமக்கு தர்மமே காவலாய் நிற்கும்.
மனம் தவறும் என்று தெரிந்தபின் சென்று தவறுதல் பாவம் ஆகும். தவறியபின் அதைத் தொடராமல் அதிலிருந்து மீள்வதே புனிதம் ஆகும்.
தவறியோர் வாழ்வுக்குக் கலங்கரை விளக்காம் இயேசுவிடம் போவோம்:-
“ இயேசுவே தவறைப் புரிபவன் மனிதன் உணர்வோம் தெளிவோடு.. .. வீழ்ந்த பின் தெளிந்து திருந்துதல் புனிதம் அறிவோம் உணர்வோடு. பிறர் வீழ்ச்சியில் நாம் உயர்ச்சி காண்பதில் மகிழ்ச்சி கனவிலும் கிடையாது. வீழ்ந்தார் தம்மை வாழ வைப்பதே மனிதத்தின் சிறப்பாகும். சுயநலப்பற்று அறுத்த நிலையில் தவறிவிடாமலும், தவறப்பண்ணாமலும் வாழும் வரம் வேண்டும் யேசுவே.” என்று இரைஞ்சி நிற்போம்.
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில்
இளைப்பாறக் கடவன. ஆமென்.
