தாய்லாந்தில் 2014 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதற்கமைய மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்த வாக்களிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் எண்ணப்பட்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், இராணுவ சார்புடைய கட்சியின் பிரதமர் வேட்பாளர், பாலாங் பிரசாரட் முன்னிலையில் உள்ளார். இந்த நிலையில் அந்த கட்சியின் ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இதேவேளை பொதுத் தேர்தலின் உத்தியோகப்பூர்வ முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என உத்தியோகப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.
இந்த தேர்தலில் வாக்களிக்க 51. 4 மில்லியன் மக்கள் தகுதிபெற்றிருந்தனர்.அவர்கள், 77 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருந்த 93 ஆயிரம் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்தனர்.
இந்த பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர் பிரயூத் ஷா ஓச்சா உள்ளிட்ட 68 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் 80 கட்சிகளை பிரதிநிதிதுவபடுத்தியுள்ளனர். 500 ஆசனங்களை கொண்ட மக்களவைக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கும் இன்றைய தேர்தலில் மக்கள் வாக்களித்தனர்.
இந்த நிலையில், தேர்தல் அமைதியாக நடைபெற்றுள்ளதாகவும் அந்த நாட்டு தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது. இராணுவ ஆட்சியாளர்களுக்கும் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவட்ரா ஆகியோருக்கிடையிலான வன்முறையால் கடந்த காலங்களில் தாய்லாந்து அரசியலில் ஸ்திரமற்ற நிலை காணப்பட்டது.
இதனால், 2006 ஆம் ஆண்டில் பிரதமர் தக்சினின் ஆட்சியைக் கவிழ்த்து மீண்டும், இராணுவம் ஆட்சி அமைத்தது.
அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டில் மீண்டும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்று பிரதமராக ஜெனரல் பிராயுட் சான் ஓச்சா பதவியேற்றார்.இந்த நிலையில் 4 வருடங்களின் பின்னர் தாய்லாந்தில் பொதுத் தேர்தல் இடம்பெறுகிறது.






