28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் இதனை நிறைவேற்ற, ஒன்றியத்தின் ஏனைய நாடுகளுடன் இணைந்து ஜேர்மனி செயற்பட்டு வருகின்றது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மசூத் அசார் பயணம் செய்ய தடை விதிக்கப்படும்.
அதேநேரம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலுள்ள அவருக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தும் முடக்கப்படும். எனினும், தற்போது வரை இத்தீர்மானம் மீது ஐரோப்பிய ஒன்றியம் எந்த முடிவும் எடுக்கவில்லை.
அந்தவகையில், இத்தீர்மானத்துக்கு 28 நாடுகளும் ஏகமனதாக ஆதரவளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பிரான்ஸ், மசூத் அசார் மீது கடந்த 15ஆம் திகதி பொருளாதாரத் தடைகளை விதித்தது.
இதன்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பட்டியலில் மசூத் அசாரை இணைக்கவும், ஏனைய நாடுகளை வலியுறுத்துவோம் என பிரான்ஸ் தெரிவித்தது.
இதேவேளை, பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம், ஐ.நா.பாதுகாப்பு சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு 14 நாடுகள் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி 4வது முறையாக அந்தத் தீர்மானத்தைத் தடுத்து நிறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






