பாகிஸ்தானில் 13 மற்றும் 15 வயதுடைய இந்து சிறுமிகளை கடத்தி கட்டாய திருமணம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்துமாறு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அவ்விரு சிறுமிகளையும் உடனடியாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிந்து மாகாண அரசுக்கு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசு தீவிரம் காட்ட வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்குட்பட்ட கோட்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த ஹோலி கொண்டாட்டத்தின்போது அப்பகுதியில் முக்கிய பிரமுகர்கள் இரு இந்து சிறுமிகளை கடத்திச் சென்றனர்.
ரவீனா(13-வயது), ரீனா(15-வயது) ஆகிய அந்த சிறுமிகளை முஸ்லிம் மதத்தலைவர் ஒருவர் கட்டாய மதமாற்றம் செய்து இருநபர்களுக்கு திருமணம் செய்து வைத்த வீடியோ காட்சிகள் அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதன்போது குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த சிறுமிகளை உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாகிஸ்தானில் உள்ள இந்திய தலைமை தூதருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





