அண்மையில் வேட்பாளர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் உங்களது வாக்கினை நல்லவர்களுக்கு இடுங்களென ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் கூறியது போன்று மீம்ஸ் ஒன்று ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், இவ்விடயம் குறித்து மக்கள் பாதை இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘சமீபகாலமாக ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயத்தின் நற்புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில், சிலதீய சக்திகளால் திட்டமிட்டு சமூக வலைதளங்களில் தவறான மீம்ஸ் மற்றும் செய்திகள் பரப்பப்படுகிறது.
அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு ‘வேட்பாளர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் பரவாயில்லை, வாங்கிக் கொள்ளுங்கள். அது அத்தனையும் அரசாங்கத்தை ஏமாற்றி, அவர்கள் திருடி ஊழல் செய்த உங்கள் பணம்தான். ஆனால், உங்கள் வாக்கை நல்லவர்களுக்கு இடுங்கள்.
சத்தியமே செய்திருந்தாலும் ஊழல் கட்சிகளுக்கு போடாதீர்கள். சகாயம்.ஐ.ஏ.எஸ்.’ என்று அவர் எங்கேயும் குறிப்பிடாத செய்தியை உண்மைக்கு புறம்பாக உள்நோக்கத்தோடு திட்டமிட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் இதுபோன்று ஒருபோதும் சொன்னதில்லை. மாறாக ‘நேர்மையான சமூகம் உருவாக வேண்டுமானால், மக்கள் அனைவரும் தங்களது வாக்குகளுக்கு பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும்’ என்றுதான் தனது ஒவ்வொரு செவ்வியிலும் கூறி வருகிறார்.
ஆகவே அவதூறு பரப்பியவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மக்கள் பாதை இயக்கம் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.






