
அந்த இரண்டு சிறுமிகள் மற்றும் அவர்களது கணவன்மார் சார்பில் பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த மனுவை பரிசீலித்த நீதிபதி, ”பாதிக்கப்பட்ட அந்த இரண்டு சிறுமிகளுக்கும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு சார்பில் தகுந்த பாதுகாப்பை அளிக்க வேண்டும். இதற்காக, பெண் பொலிஸ் அதிகாரியை காண்காணிப்பாளராக அரசு நியமிக்க வேண்டும்.
மேலும், அந்த சிறுமிகள் இருவரும் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தால் அதற்கான விசாரணையை விரைவாக முடித்து அறிக்கையை அடுத்த மாதம் 2ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதும் கவனத்தில் எடுக்கப்பட்டது.
கடந்த 22ஆம் திகதி பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்குட்பட்ட கோட்கி மாவட்டத்தில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தின்போது அப்பகுதியில் முக்கிய பிரமுகர்கள், இரு இந்து சிறுமிகளை கடத்திச் சென்றனர்.
கடத்திச் சென்ற சிறுமிகளை முஸ்லிம் மதத்தலைவர் ஒருவர் கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்துவைத்த வீடியோ காட்சிகள் அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் பரவியது. இதற்கெதிராக கடும் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
