இந்த படத்தில ஓவியா, அன்சூன் பால்,மொஹிசா ராம், மசூம் சங்கர், பொம்மு லட்சுமி, தேஜ் ராஜ், தேவ் ராஜ், சிம்பு உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
காதல், ரொமான்ஸ், நட்பு என எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தங்களுக்குப் பிடித்த மாதிரி வாழ நினைக்கும் 5 பெண்களின் கதையே ’90 எம்.எல்.’.
சரி வாருங்கள் படத்தை பற்றி பார்ப்போம்..
சென்னையில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்க வருகிறார் ரியா (ஓவியா). அங்கு ஏற்கெனவே குடியிருக்கும் தாமரை (பொம்மு லட்சுமி), சுகன்யா (மோனிஷா ராம்), காஜல் (மசூம் ஷங்கர்) , பாரு (ஸ்ரீ கோபிகா) ஆகிய நான்கு பெண்களைச் சந்தித்துப் பழகுகிறார்.
தாமரையின் பிறந்த நாள் அன்று ஓவியா மதுவிருந்து கொடுக்க, அதுவரை பழக்கமே இல்லாத மற்ற பெண்களும் தயங்கியபடி மது அருந்துகின்றனர்.
பின் ஒவ்வொருவராக பாலியல் குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், திருமணம் குறித்தும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
சுகன்யா தன் காதலுக்கு மதம் தடையாக இருப்பதாகவும் தான் காதலிக்கும் நபருக்கு அடுத்த நாள் திருமணம் நடக்க இருப்பதாகவும் புலம்புகிறார்.
அவரைத் தேற்றும் விதமாக சுகன்யாவைக் காதலனுடன் சேர்க்க நான்கு பெண்களும் திட்டமிடுகின்றனர்.
இப்படி ஒவ்வொரு முறையும் இவர்கள் சேரும்போது ஒவ்வொருவரின் பிரச்சினைகள் தெரியவர அந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டதா? ஒவியா தீர்த்து வைத்தாரா ? இல்லையா? என்பதுதான் மீதிக் கதை.
சரி படத்தின் பிளஸ் என்று பார்த்தால்..
கட்டுப்பாடோடு வாழும் பெண்களுக்கு சுதந்திரம் ஏன் அவசியம், விருப்பப்பட்ட வாழ்க்கையை ஏன் அவர்களால் வாழ முடியவில்லை??? என்ற கேள்வியை இயக்குனர் அனிதா உதீப் இப்படத்தில் எழுப்பியிருக்கும் விதம் சிறப்பு.
மேலும் ஆண்கள் மட்டுமே தங்கள் பாலியல் விருப்பத்தை, ஏக்கத்தை, இயலாமையைப் பேசும் சூழலில் பெண்கள் அது குறித்துப் பேசுவது தமிழ் சினிமா என்று பார்க்கும் போது புதிய விடயமாக இருக்கின்றது.
அத்தோடு பெண்ணின் தன்பாலின உறவைக் குறித்தும், அந்த உறவு முறையும் தவறில்லை என படத்தின் ஊடக இயக்குனர் இதில் துணிச்சலுடன் நிரூபித்துள்ளார்.
அத்தோடு அன்டனியின் படத்தொகுப்பு, அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, சிம்புவின் இசை ஆகிய மூன்றும் இப்படத்திற்கு பெரும் பலம் என்றே கூறலாம்…
சரி படத்தின் மைனஸ் என்று பார்த்தால்
5 பெண்களும் மது அருந்துவது போன்ற காட்சிகள் அடுத்தடுத்து தொடர்வதும் போதைப் பொருள் பயன்படுத்தும் அளவுக்குச் செல்வதும் கதைக்கு அதிகம் என்றே கூறலாம்.
அதேபோல முத்தக் காட்சிகளும், படுக்கையறை (18+) காட்சிகளும் கூட அசிங்கமாகவும் , ஆபசமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மற்றும்படி பார்த்தால் தமிழ் சினிமாவில் பேசாப்பொருளைப் பேசத் துணிந்ததற்காக 90.எம்.எல். படத்தை வரவேற்கலாம்.
மொத்தத்தில் 90.எம்.எல். 99 விகிதம் நட்பும் அடங்காத ரகளையும்….
