தனது தோழிகள் சகிதம்
சிட்டுக் குருவியென பறந்து வருகிறாள் ஹயா
அவளது வாய் வழிந்த புன்னகை
விடுதலையின் பரவசத்தை வரைந்து காட்டுகிறது
கூடவே விளையாடிக் கழிப்புறவென
தனது மிக நெருக்கமான தோழியை மட்டும்
வீட்டிற்கு அழைத்து வருகிறாள்
வரும் வழியில் கையூட்டாக
விதம் விதமான இனிப்புகளை வாங்கி
அவளுக்கு வழங்கி இருக்கிறாள்
உடன் தனது அறையில் குவிந்திருந்த
சிறியதும் பெரியதுமான பொம்மைகளையும்
பலூன் ஊதிகளையும் கொடுக்கிறாள்
உம்மாவிற்கு இதழ் பதிந்த
முத்தமொன்றை பரிசாக கொடுத்து
தனது இணை பிரியாத் தோழிக்காக
குளிர் பானம் தயாரித்து தரும்படி அவாவுகிறாள்
இருவருமாக விளையாட
ஆரம்பித்த கணத்தினிடை
எல்லாவற்றையும் சொதப்பியபடி
தோழியை அவளது தந்தை
வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறார்
ஹயாவின் ஒட்டு மொத்த புன்னகையும்
தவறி விழுந்த கண்ணாடிக் குவழையென
உடைந்து சிதறுகையில் முகத்தை தொங்கவிட்டு
செய்வதறியாது திகைத்து நிற்கிறாள்
ஒரு தருணத்தில்
அவள் கண்களில் அடக்கி வைத்திருந்த
உப்பாறு பெருக்கெடுக்கிறது
பேரண்பு மிக்க உம்மா மீதும்
என் மீதும் எரிந்தெரிந்து விழுகிறாள்
அவளை சமாளிக்கப் போராடி
அலுத்த மட்டில் பின் வாங்குகிறேன்
அவள் பொம்மைகளை
முறைத்துப் பார்த்து சிணுங்கியபடி கரைந்தாள்
சிட்டுக் குருவிகளுக்கு சக குருவிகளோடு
விளையாடிக் தீரப்பதை தவிர வேறு மகிழ்ச்சி
என்ன இருக்குமென கருதுகிறீர்கள்
ஜமீல்
