தீவிரவாத தாக்குதல் தொடர்பான எந்தவித ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் வழங்க முடியாது என்றும் பாகிஸ்தானின் தொடர்பை அம்பலப்படுத்துவதே தங்களது முக்கிய நோக்கம் என்றும் இந்தியா உறுதியாக கூறியுள்ளது.தீவிரவாதம் தொடர்பான ஆதாரங்களை இந்தியா வழங்கினால், சதிகாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானுக்கு இந்தியா அளித்தது. ஆனால், குற்றவாளிகள் மீது பாகிஸ்தான் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விமான தளத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக நேரில் வந்து ஆய்வு நடத்த, பாகிஸ்தான் விசாரணை குழுவை அனுமதித்தோம். தங்கள் நாட்டுக்கு திரும்பிய பாகிஸ்தான் குழு, இந்தியா ஆதாரம் அளிக்க தவறி விட்டதாக கூறியது.
பாகிஸ்தான் இத்தகைய முறையில் நடந்து கொள்ளும்போது ஆதாரங்களை அளிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அதற்கு பதிலாக தங்கள் நட்பு நாடுகளிடம் அந்த ஆதாரங்களை அளித்து, புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல இந்திய மண்ணில் நடந்த தீவிரவாத சம்பவங்களில் பாகிஸ்தானின் தொடர்பை உலக அரங்கில் அம்பலப்படுத்துவதே தங்களது முக்கிய நோக்கமாகும் எனக் கூறியுள்ளார்.
புல்வாமா தாக்குதலால் இரு நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றம் நீடித்து வருகின்றது. இந்த தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை வெளியிட்டிருந்தார். உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்ததோடு இந்தியாவிற்கு உதவிகளோடு ஆதரவையும் வழங்க தயார் நிலையிலுள்ளது.
இந்த நிலையில், இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்ப அழைத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.





