ரபேல் போர் விமானம் ஊழல் தொடர்பாக ராகுல் காந்தியின் கருத்தை ஆதரிப்பதாக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.இது குறித்து சிவசேனா தனது கட்சியின் அதிகாரப்பூர்வமான ‘சாம்னா’ பத்திரிகையில் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றிலேயே உத்தவ் தாக்கரே இவ்விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமான ஊழல் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டார். அதில் இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் நேரடியாக தலையிட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ரபேல் ஒப்பந்தம் குறித்து இந்தியா – பிரான்ஸ் இடையே நடந்த கலந்துரையாடலின்போது பிரதமர் அலுவலகம் தலையிட்டதாக கூறியிருப்பதை பாதுகாப்புத்துறை அமைச்சகம் மறுத்தது. இதனை பிரதமர் மோடியும் திட்டவட்டமாக மறுத்தார்.
இந்த ஒப்பந்த விவகாரத்தில் மோடி நேரடியாக தலையிட்டுள்ளார். முக்கிய பிரமுகர்களான இராணுவ அமைச்சரும், இராணுவ அமைச்சின் செயலாளரும் இடம்பெறவில்லை.
மோடியே தன்னிச்சையாகச் செயல்பட்டு இருக்கிறார். ரபேல் போர் விமானத்தின் விலை மற்றும் ஒப்பந்தத்தை யார் பெற வேண்டும் என அவரே தீர்மானித்து இருக்கிறார்.
எனவே இந்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களை மோடி எதிர்கொள்ள வேண்டும்” என உத்தவ் தாக்கரே அக்கட்டுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





