
குறிப்பாக ஈழத்திலிருந்து எழுதும் படைப்பாளிகளின் நாடு கடந்த இலக்கிய உறவு நிலை கவனத்தைப் பெருகிறது .இதற்கான மெய்யியல் பண்பாக அமைவது அறிவியல்,கணிதவியல் இன்னும் அந்தந்த நாட்டின் அகநிலைத் துறைகளின் வெற்றிப் புத்தாக்கங்கள். ஈழம் போன்ற ஒரு சிறிய நாட்டிலுருந்து தன்னை சர்வதேச ரீதியாக அடையாளப்படுதுவதென்பது பௌதிக சூழலில் சலுகைகளின்றி கடினமே!
இதன் எதிர்வினையாக இயங்கிக் கொண்டிருப்பவர் எம்.ரிஷான் ஷெரீப்.இவர் எழுத்தாளரும்,கவிஞரும்,ஊடகவியலாளரும் ஆவார்.கவிதை,சிறுகதை,ஓவியம்,கட்டுரைகள்,மொழிபெயர்ப்பு,புகைப்படங்கள்,குறும் படங்கள்,ஆவணப்படங்கள் போன்ற பல துறைகளிலும் தன்னையொரு விருட்சமாக இயக்கியும் இயங்கியும் வருகிறார்.
ஊடகவியலாளரான இவர் இத்தாலியிலிருந்து இயங்கும் 'சனல் வன் சிறீலங்கா 'எனும் தொலைக் காட்சியில் இடம்பெறும் தமிழ் நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாளராகவும் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணியாற்றியதோடு வசந்தம் தொலைக் காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
ரிஷானின் படைப்புக்கள் தீரா நதி,ஆனந்த விகடன்,காலச் சுவடு,படச்சுருள்,கூடு,அம்ருதா,சிற்றேடு,மலைகள்,வல்லமை,பதிவுகள்,காற்றுவெளி,நவீனவிருட்சம் என இவரது பரப்பு விரிந்து செல்கிறது.
ரிஷான் தன்னுடைய சுய படைப்புக்களை கடந்து தன் மொழியின் ஆழுமையை அல்லது தன் மொழிகளின் அசைவுகளை மொழி பெயர்ப்புகள் ஊடாக சமூக மயப்படுத்தி அதில் வெற்றியடைந்து கூட்டிணைந்த இலக்கிய குழும்பங்களிடம் பல விருதுகளுக்கு சொந்தக் காரனாக இருக்கிறார்.குறிப்பாக ஆபிரிக்க,பலஸ்தீன்,அரபு,சிங்கள படைப்புக்களையும் இன்னும் ஆங்கில படைப்புக்களையும் மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறார்.
இவருடைய படைப்புகளை என்னால் முழுமையாக பகிர்ந்து கொள்ள முடியாவிட்டாலும் ரிஷான் பற்றியதான எனது இலக்கிய சேகரத்தை வாசக மனங்களிடம் முன்வைக்கிறேன்.
இலைகளை உதிர்த்தழும்
விருட்சங்களைத் தடவிக் கொடுத்து
தாண்டிச் சென்ற
கோடையைக் கழுவி
ஞாபகக் கொடியில்
காயப் போட்டாயிற்று.
வெண்சாயங்களில்
தோய்த்தெடுத்த
கிளைகளைக் கொண்டு
குளிர் காலக் கம்பளிகளை
பின்னுகிறது காலம் .
ஒரு பனித்துளி ஈரம் என்கிற இந்தக் கவிதை சொல்லப்படாத காலத்தின் குரலை பசுமையான மொழியாடலூடாக காலத்தை வென்று கருத்தாக்கங்களை பிறப்பிக்கின்றது.இந்த கவிதையின் பிரதி மற்றொரு பார்வையில் சிலரது நுண்மையான அரசியல் களத்தை ஊடுருவிப் பரப்புகிறது.
பூர்வீக வீட்டிலிருந்து
சற்றுத் தொலைவுதான்
எனினும்
நடந்தே செல்லத் தலைப்பட்டோம்
அரூப ஆவிகள் உலவும்
தொன்ம பூமியென
வழி காட்டியவர்கள்
சொன்ன கதை கேட்டுஅச்சமுற்றாயா.
எத்தனையெத்தனையோ
தலைமுறைகளுக்கு
ஊணிட்ட
வேலிகளற்ற தரிசு வயலது
பரந்து விரிந்த
எம் பண்டைய பூமி
வண்டி கட்டிச் சென்று
மூத்தோர் விவசாயம்
பார்த்த
சருகுக் கோரை புற்கள்
விரவிக் கிடக்கும்
பயிர் நிலம்.
செம்மஞ்சள் பொழுதின் வானம் என்கிற இந்தக் கவிதை சிங்கள தேசிய வாதத்தின் வரலாற்றுத் திரிபும் புனைவுகளையும் தீரமிக்க சொல்லாடலூடாக ஒரு இனத்தின் மீது இன்னொரு இனம் அல்லது அரசியல் உள்முரண்களை கவிதை வழியாக ஊடுருவி பிறழ்வு நிலை அனுபவத்தைத் தருகிறது.
மழை வெளி
நிலத்தின் பட்சிகள்
ஈர இறகை உலர்த்தும்
புற்பாதையில்
மீதமிருக்கும் நம் பாதச்சுவடுகள்
இன்னும்
எப்பொழுதும் மழைபெய்யும்
ஊரின் பகல் வேளை
மென்குளிரைப் பரப்பியிருக்க
நனைந்திடாதபடி முழுவதுமாக
மறைத்த நாம்
நடந்து வந்த பாதையது.
பிறகும் தொடரும் தீவின் மழை என்கிற இந்த கவிதை மொழியின் அழகியலை கவி நறுமணத்தை சொல்லி நிற்கும் அதைய நேரம் நமது புலன் அனுபவமாக ஒரு இனத்தின் தொடர் துயர் வாழ்வியலின் முகத்தையும் இருப்பின் அங்கிகாரத்தையும் கேள்வியல் ரீதியாக விசாரணைக்கு உற்படுத்துகிறது.
ரிஷானின் படைப்புகளும் தொகுதிகளும் பௌதிக நிலையில் உணரும் போது காலத்தை வென்று நிற்கிறது குறிப்பாக "கறுப்பு ஜூன் 2014" தொகுதி இலங்கை முஸ்லிம்கள் மீது கடந்ந காலங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் அவற்றுக்கான பின்னணியும் எனும் முழுமையான கள நிலவர மற்றும் ஆய்வுத் தொகுப்பாக பதிவாகியிருக்கிறது.
ரிஷான் ஷெரீபின் மொழிப் பரப்பு நமக்கு வேகமும் அதிர்வையும் தருவதோடு இவரது எழுத்துக்கள் வெவ்வேறு நிலை அனுபவங்களையும் எழுப்புகின்றது.இவரது இலக்கிய அறிதல் முறை சமூகங்களின் ஆன்மாவையும் வாழ்வையும் தெளிவாகக் காட்சிப்படுத்துகிறது .
இவரது மொழியாழுமை தனித்துவமான உழைப்பு இதன் பகுதியே இவரது படைப்புகள் தேசம் தாண்டியும் வாழ்கிறது.
ரிஷானின் படைப்புகள் அரசியலை அதன் முன் பின் முகத்திரையை விமர்சிக்கின்றன.அதைப்போல் சிறுபாண்மை சமூகங்களின் குரலாகவும் பேசி நிற்கிறது.இன்னும் அச்சமூகங்களின வலியையும் காயங்களையும் படைப்புகளில் நிரப்பி வைத்திருக்கிறார். ஆக இவரது எழுத்துக்கள் வரலாற்று பதிவுகள்.
ரிஷானுடைய மொழி பெயர்ப்புகளிலும் சமூக அவலங்கள் நெருக்கீடுகள்.அதன் துயரங்கள் இழப்புகள் என பேசி அவதானிப்பை எட்டி கவித்துவ ஈர்ப்பை தருகிறது.இவரது படைப்புகள் வாசிக்கும் ஒருவாசகனால் மறக்க முடியாத வஸீகரத்தையும் ரசனைப் பிரதியையும் வெவ்வேறு சுவையுடன் பல்குரல் வடிவ உணர்வுகளாக நமக்குள் உட்செலுத்துகிறது.
ரிஷானின் படைப்புகள்
♪ வீழ்தலின் நிழல் (கவிதை)
♪ அம்மாவின் ரகசியம் (மொழிபெயர்ப்பு) அரச சாகித்திய விருது பெற்றது.
♪ தலைப்பற்ற தாய் நிலம் (மொழி பெயர்ப்பு கவிதை).
♪ கறுப்பு ஜூன் 2014 (ஆய்வுத் தொகுப்பு)
இவரது ஒரு கவிதை
தொலைவிலும் அருகிலும் மிதக்கும் கடல்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
துல்லியமான நீர்ப்பரப்பு
கூழாங்கற்களைப் போர்த்திப் படர்ந்திருக்கிறது
சலனமற்றிருக்கிறது
ஈர நிலத்தின் சயனம்.
போர்வையின் பாசிப்
பூக்களும் பசிய
அலங்காரங்களும்
அசைந்தசைந்து
காற்றின் தாலாட்டுக்களை
இசைக்கின்றன மௌனமாய்.
உன் கையிலொரு மதுக் குவளை
அதிதிகளாய்ப் பறவைகள்
வந்திரையும்
மா கடலின் மேலேயான
வானம் பற்றித் தெளிவாகத் தெரியும்
இறுதி மதுவில்
கரைந்தழியும் பேரண்டம்
வேறென்ன சொல்ல
இயலும்.
ஏ.நஸ்புள்ளாஹ்.
