பரம்பரை கவிதை.
♪
ஆதி மனிதரின் பரம்பரையை
அந்த தீவை விட்டும்
வெளியேற்றிவிட வேண்டுமென்பதில்
ஞானம் பெற்றுவிட்ட
போதிமர நிழல்களில்
வாழும் சருகுகள் முனைப்போடு
நெடுங்காலமாய் தவமிருக்கின்றன
அன்பை போதித்த
மகான் என்ன போதித்திருப்பார்
வேரொன்றை
அன்பைத் தவிர
அந்த மறை பொருளை
யோசிக்கும்போது
போதிமர சருகொன்றை
கடவுள் தண்டித்துவிட்டதாக
பறவைகளின் வெளியில்
காற்று சுமந்து வந்த செய்தித்தாள்
கண்ணோட்டம்
செவிகளில் அதன் றெக்கைகளை
உதறிச் செல்கிறது.
அவசரமாய் ஒரு முடிவிற்கு வருகிறேன்
ஆதி மனிதரின்
பரம்பரையை
தனித்தனியே பிரித்தது
எது வென்று கண்டறிய
ரயிலேறி பயணிக்கிறேன.
00
பாம்புகளற்ற வெளி.
♪
பாம்புகளற்ற வெளியில்
வசிப்தென்பது
உன்னைச் சுற்றியிருப்பவர்களை
தீர்மானித்திருக்கிறது
பாம்புகள் எப்படியும்
மலைகளாக வளர்ந்துவிடுகின்றன
வளர்ந்த பாம்புகள்
உனது காடுகளில்
வாழப்பழகிக் கொள்வதோடு
உன்னை ருசிப்தற்கும்
முடிவு செய்கின்றன
நீ அசதியாயிருக்கும் தருணமொன்றில்
அல்லது
நீ நீயாக இல்லாத
துயரப் பொழுதொன்றில்
பாய்ந்து தின்றுவிட
ஒரு பழைய அத்தியாயத்தை
முதலில் இருந்து பாலென
நினைத்துக் குடித்துவிடுகின்றன
பிறகென்ன
போதை தலையைக் கோவுகிறது
கோரப்பசிபிலிருக்கும் பாம்புகள
உன்னை தேர்வு செய்கின்றன
அன்றைய விருந்துக்காய்.
முடிந்தால்,
நீ கடவுளிடம் வரம் கேள்
இரண்டு சிறகுகளையும் கொண்டு
பறவைகளின் வெளிக்கு பற.
_ஏ.நஸ்புள்ளாஹ்.
