திருகோணமலையில் இன்று (திங்கட்கிழமை) மீனவர்களினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுபிட்டி பெரிய கரைசைக் களப்பை விடுவிக்கக் கோரி மீனவர்கள் இன்று ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த கரைசைப் பகுதியினை நீண்ட காலமாக அப்பகுதி மீனவர்கள் தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர். எனினும் யுத்தம் முடிவடைந்ததும் அங்குள்ள சுமார் 1800 ஏக்கர் கரைசைக் காணியை தனியார் கம்பனிக்கு மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி அரசாங்கம் உப்பு உற்பத்திக்காக வழங்கியிருந்தது.
களப்பு தொழிலிலை நம்பி அதில் ஈடுபடும் 1000 மீனவத் தொழிவாளர்கள் உள்ளனர். இக்களப்பு பகுதிகளில் இறால், நண்டு, மீன்பிடி போன்றவற்றை ஜீவனோபாயமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முறையற்ற வகையில், 1805 ஏக்கர் மக்களின் காணி எடுக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் 450 ஏக்கர் காணி உப்பளத்திற்கும், 37 ஏக்கர் காணி தொழிற்சாலைக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 1318 ஏக்கர் காணி கடலின் களப்புகளில் சிறுகடல் தொழில் செய்யும் தொழிலாளர்களின் மீன், நண்டு வளர்ப்புகளுக்கென ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் குறித்த களப்பை விடுவிக்குமாறு மீனவர்கள் கோரியிருந்த போதிலும் அதற்கான தீர்வானது இடுவரை எட்டப்படவில்லை.
இந்நிலையில் கடந்த நவம்பரில் பிரதேச செயலாளரின் கோரிக்கைக்கிணங்க குறித்த நிறுவனத்திற்கு கும்புறுபிட்டி களப்பு பகுதியில் நீண்ட கால குத்தகையில் வழங்கப்பட்ட காணியிலிருந்து 1000 ஏக்கர் களப்பு பகுதியை விடுவிப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்டது.
எனினும் பல மாதங்கள் கடந்தும் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், தமக்காக ஒதுக்கப்பட்ட காணியைப் பெற்றுத்தருமாறு கோரி மக்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.





