போதைப் பொருளுக்கு எதிரான பொலிஸாரின் நடவடிக்கைக்கு 19 ஆவது அரசியலமைப்பு திருத்தமே பெரிதும் உதவியாக இருக்கின்றது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அத்தோடு 19 ஆவது திருத்தத்தின் விளைவாக எந்தவொரு அரசியல் தலையீடுமின்றி பொலிஸ் சுதந்திரமாக செயற்பட முடிந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
புளத்சிங்கள பகுதியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
19 ஆவது திருத்த சட்டம் கடந்த சில நாட்களில் விமர்சிக்கப்பட்டது. ஆனால் 19 வது திருத்தம் இல்லாவிட்டால், போதை பொருட்கள் மீதான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டிருக்க முடியாது என பிரதமர் கூறினார்.
இலங்கையின் வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய ஹெரோயின் போதைப்பொருள் (294.49KG) கடந்த வார இறுதியில் கொழும்பில் கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
19 ஆவது திருத்த சட்டம் தொடர்பாக சிறிய விளக்கம்,
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது, நிறைவேற்றப்பட்ட 18வது திருத்தச்சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கும் சட்டங்கள் இதன் மூலம் திரும்பப் பெறப்படுவதன் மூலம் நாட்டில் மக்களாட்சியை மீண்டும் கொண்டு வருவதே, 9 ஆவது திருத்தச் சட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
18வது திருத்தம் மூலம் ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக வர முடியாது என்ற வரையறையை மஹிந்த ராஜபக்ஷ நீக்கியிருந்தார். அத்தோடு சுயாதீன தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, அரசியலமைப்பு சபை உட்பட பல்வேறு ஆணைக்குழுக்களை அதிகாரங்கள் அற்ற அமைப்புக்களாக மாற்றினார்.
ஆனால் 19வது திருத்தம், தேர்தல் ஆணைக்குழு பொதுச் சேவைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, அரச கரும மொழிகள் ஆணைக்குழு என்பன சுயாதீனமாக்கப்பட்டது.





