தமிழர் பண்பாடுகளைத் தொலைத்துவிட்டு இப்போது தேடிக்கொண்டிருக்கிறோம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.அத்துடன், எமது முன்னோர்கள் வைத்திருந்த பாண்பாட்டு விழுமியங்களை, தற்போது மேலைத்தேயவர்கள் வைத்திருக்கின்றார்கள். மாறாக அதனை நாங்கள் கைவிட்டிருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிராம சக்தி வாரத்தின் இறுதி நாள் கலாசார தின நிகழ்வு மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் எருவில் கிழக்கு கிராமத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.
எருவில் கிழக்கில் வரையறுக்கப்பட்ட விவசாய உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பொ.பத்மநாதன், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாவட்ட அரசாங்க அதிபர் உரையாற்றினார்.
இதன்போது அவர் பேசுகையில், “ஜனாதிபதி போதைப்பொருள் ஒழிப்புக்காக முழுமூச்சாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். போதைவஸ்துகள் கடத்தப்படுவது, வியாபாரம் செய்வது போன்ற பல சம்பவங்களை நாங்கள் ஊடகங்கள் வாயிலாக நாளாந்தம் அறிகின்றோம்.
எந்த சமூகத்தினுடைய கைகளில் இந்த போதைப் பொருட்கள் சிக்கக் கூடாது என நாங்கள் சிந்தித்தோமோ அவ்வாறானவர்களின் கைகளில் அவை சிக்குண்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது.
ஒரு குறிப்பிட்ட வலைப்பின்னலில் இருக்கின்ற சிலர் இன்னும் பொரும்பான்மையான இளம் சமூகத்தை சீரழிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். இதில் எமது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மொழி, கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களைத் தொலைத்துவிட்டு நாங்கள் அவற்றை மீண்டும் தேடிக் கொண்டிருக்கின்றோம். எமது முன்னோர்கள் வைத்திருந்த பாண்பாட்டு விழுமியங்களையும், கலை கலாசார அம்சங்களையும் தற்போது மேலைத்தேயவர்கள் வைத்திருக்கின்றார்கள். மாறாக அதனை நாங்கள் கைவிட்டிருக்கின்றோம்.
யோகாசனம் உலகிலே அதிகம் பணம் சம்பாதிக்கக் கூடிய துறையாக இருக்கின்றது. தற்போது அதனை எமக்கு வந்து சொல்லித்தருபவர்கள் வெள்ளைக்காரர்களாக இருக்கின்றார்கள். ஆனால் எமது யோகிகளும், முனிவர்களும், எமக்கு அதனைக் கற்றுத்தந்திருக்கின்றார்கள்.
எமது மூதாதையர்கள் எமக்குக் கற்றுத்தந்த நல்ல பாடங்களை நாங்கள் மறந்து விட்டோம். எதிர்காலத்திலே அவற்றை எமது இளம் சமூதாயத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும். தற்போதைய நிலையில் ஆன்மீகம் முக்கிய விடையமாகக் காணப்படுகின்றது” என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வின் போது, கூத்து, வில்லுப்பாட்டு, பட்டிமன்றம், நடனம், விநோத உடை அலங்காரம், உள்ளிட்ட பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.








