புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களில் ஒருவரான சிவச்சந்திரனின் உடல் இன்று (சனிக்கிழமை) மாலை அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.மாலை 5.30 மணியளவில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சிவச்சந்திரனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தேசிய ஆயுதப் பொலிஸ் படை வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகிய 2 வீரர்களும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த தமிழக வீரர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து திருச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதன்போது, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருச்சி விமான நிலையத்துக்குச் சென்று சிவச்சந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து சிவச்சந்திரனின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனத்தில் அவரின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
கார்குடி கிராமத்தில் உறவினர்கள் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக சிவச்சந்திரனின் உடல் வைக்கப்பட்டதன் பின்னர் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதேவேளை, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் சுப்பிரமணியனின் உடல் தூத்துக்குடி மாவட்டம், சவலாப்பேரி கிராமத்தில் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
21 குண்டுகள் முழங்க புல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் விளைநிலத்தில் விதைக்கப்பட்டது
இவர் ஸ்ரீநகரில் தேசிய ஆயத பொலிஸ் படை வீரராக பணியாற்றினார். இவருக்கு கிருஷ்ணவேணி (வயது-23) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.
சுப்பிரமணியனின் உடல் இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஏனைய வீரர்களின் உடல்களுடன் திருச்சி வந்தது. அங்கு அவரது உடலுக்கு மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், ஆட்சியர் நடராஜன், உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியனின் உடல் தனி வாகனத்தில் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி கிராமத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு சுப்பிரமணியன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார்.
சவலாப்பேரி கிராமத்தை சுற்றியுள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சவலாப்பேரி கிராமத்திற்கு திரண்டு வந்து சுப்பிரமணியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் சுப்பிரமணியன் உடல் வீட்டின் அருகாமையில் உள்ள அவரது குடும்பத்துக்குச் சொந்தமான விவசாய நிலத்துக்கு இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன்போது, தமிழக அரசு அறிவித்த 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலை இருவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் வழங்கப்பட்டது.





