புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளதாக அறிவித்துள்ளார்.மோட்டார் சைக்கிளிள் பயணம் மேற்கொள்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டுமென்ற சட்டத்தை பொலிஸார் அமுல்படுத்த வேண்டுமென ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டமை தொடர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆளுநரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் நான்காவது நாளாக இன்றும் (சனிக்கிழமை) ஈடுப்பட்டு வருகின்றனர்.
ஆனால், குறித்த போராட்டத்துக்கு எந்ததொரு கருத்தையும் ஆளுநர் கிரண்பேடி வெளியிடாதமையால் நாட்டின் முக்கிய தலைவர்களான ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளதாக நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் நாராயணசாமி மேலும் கூறியுள்ளதாவது,
“மாநில வளர்ச்சிக்கு ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றார்.
இதனால் கடந்த 13ஆம் திகதி முதல் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் மாளிகை முன்பு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், இவைகளை கவனத்திற்கொள்ளாமல் தமது செயற்பாடுகளை மாத்திரம் ஆளுநர் மேற்கொள்கின்றமை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகையால் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் பாரிய உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.
மேலும் 12 மையங்களில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதுடன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 30 தொகுதிகளில் கருப்பு கொடி ஏற்றப்படவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 18ஆம் திகதி கிரண்பேடியை கண்டித்து, குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தப்படும்” என நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.





