ஈரானில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக விளக்கமளிக்குமாறு ஈரான் அரசு பாகிஸ்தானை அழைத்துள்ளது.பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 27 இராணுவ வீரர்கள் உயிரிழந்தமை தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பாகிஸ்தான் தூதுவர் ரபட் மசவ்டுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையில் ஈரானின் சிஸ்டான் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர்.
இதில் 27 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல்-அடில் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த அமைப்பு பாகிஸ்தான் இராணுவத்தின் ஆதரவு பெற்றது என்ற நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு டெஹ்ரானில் உள்ள பாகிஸ்தான் தலைமை தூதர் ரபட் மசவ்ட்-க்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.
எங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்து ஜெய்ஷ் அல்-அடில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பஹ்ரம் கசேமி வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அண்மையில் இந்தியாவின் புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கராதத் தாக்குதலுக்கும் பாகிஸ்தான் இராணுவ ஆதரவுபெற்ற ஜெய்ஸ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





