பாகிஸ்தானின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவுதி இளவரசர் இன்று (திங்கட்கிழமை) மாலை பாகிஸ்தான் அதிபர் மாளிகையில் அதிபர் ஆரிப் அல்வியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் அதிபர் ஆரிப் அல்வி, பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய ‘நிஷான் இ பாகிஸ்தான்’ விருதினை சவுதி இளவரசருக்கு வழங்கி கௌரவித்தார். இதன்போது பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்ட அமைச்சர்கள் உடனிருந்தனர்.
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சமீபத்தில் சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்தார். அவரது அழைப்பின் பேரில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இஸ்லாமாபாத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த விஜயத்தில், இருநாடுகளுக்கும் இடையில் சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான 8 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





