ஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி வழக்கின் தீர்ப்பு தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குத் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “ஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அரசு முடிவு செய்யும். மக்கள் இனிமேல் அச்சமடையத் தேவையில்லை. போராட்டம் நடத்தவும் அவசியமில்லை.
முதலமைச்சர் ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என உறுதிப்பட கூறினார். தமிழக அரச சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றத்தில் திறமையாக வாதாடி சட்டபூர்வ நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
இதேவேளை, தீர்ப்பு வருவதையொட்டி தூத்துக்குடியில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் இந்த பாதுகாப்பு படிப்படியாக அகற்றப்படும்” என்று அவர் குறிப்பிட்டார்.





